Gold Bees என்றால் என்ன | What are Gold BeES & Full Details In Tamil.

GoldBees என்றால், Gold benchmark Exchange Traded Scheme(Gold BeES) தங்கத்தின் திறன்மதிப்பீடு சார்ந்து, பங்குசந்தையில் வாணிபம் செய்யும் திட்டம். இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு சமமாக தங்கமானது வாங்கப்படுகிறது.
இதுவும் கிட்டத்தட்ட பரஸ்பர நிதி திட்டத்தைப் போலத்தான். ஆனால், இந்த பரஸ்பர நிதி திட்டத்தின் அலகுகள், பங்குகளைப் போல் பங்கு சந்தையில் வாங்க, விற்கப்படுகின்றன. இவற்றை ஆங்கிலத்தில் Exchange Traded Funds(பங்குசந்தையில் வாணிபம் செய்யப்படும் பரஸ்பர நிதிகள்) என்று அழைக்கின்றனர். பொதுவாக, ஒரு அலகு என்பது ஒரு கிராம் தங்கத்துடன் ஒப்பிடப்படுகிறது. தங்கத்தின் விலைக்கேற்ப, இந்த பரஸ்பர நிதியின் அலகானது ஏறியோ, இறங்கியோ இருக்கும்.

தங்க பரஸ்பர நிதிகளில் எவ்வாறு லாபம் கணக்கிடப்படுகிறது:

அலகுகளின் லாபம் அல்லது நஷ்டமானது, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில், பரஸ்பர நிதி செலவு விகிதமானது கழிக்கப்பட்டு, மீதப் பணமானது லாபமாக/ நஷ்டமாக அமையும்.

இவற்றை காகித தங்கம் என்று அழைப்பர். ஏனென்றால், உங்களால் இந்த திட்டங்களில் அலகுக்கு பதிலாக தங்கமாக மாற்ற இயலாது. அலகுகளை விற்றால், அதற்கு ஈடாக பணம் கிடைக்குமே அன்றி, தங்கமாக கிடைக்காது. இவற்றிற்கும் , தங்க கட்டிகளாக வைத்திருப்பதற்கும் சில,பல நிறை குறைகள் உள்ளன.



தங்கத்தின் அழுக்குகள்: 

காகித தங்கம்: கவலைக் கொள்ளத் தேவையில்லை.

அசல் தங்கம்: அழுக்கின் காரணமாக விலை கொஞ்சம் குறையும்.

தங்கத்தினை பாதுகாப்பது:

காகித தங்கம்: நாம் நமது டீமேட் கணக்கில் வைத்திருப்பதால், பாதுகாக்கும் கவலை இல்லை.

அசல் தங்கம்: பாதுகாப்பாக பெட்டகத்தில் வைத்திருந்து காக்க வேண்டும்.

தங்கத்தின் மீதான காப்பீடு:

காகித தங்கம்: நாம் நமது டீமேட் கணக்கில் வைத்திருப்பதால், காப்பீடு வைத்திருக்க வேண்டியதில்லை.

அசல் தங்கம்: காப்பீடு வைத்திருப்பது நல்லது.

நீர்ப்புத்தன்மை:

காகித தங்கம்: பணமாக மாற்றிக் கொள்வது எளிது. பங்கு சந்தையின் நேர காலத்தில் மட்டுமே முடியும். மேலும், பொருளாதாரமே பிரச்சனையாக உள்ள காலங்களில், அவசரமாக தேவைப்படும் போது, எளிதாக உதவாது. பெரும் பிரச்சனை காலங்களில், தங்கத்தின் அலகுகளை நாம் விற்க நினைத்தாலும், வாங்குவதற்கு ஆள் வேண்டும். தங்க விலை சரிவு காலங்களில், நஷ்டத்தில் விற்க நேரிடலாம்.

அசல் தங்கம்: பணமாக மாற்றுவது எளிது. எப்போது வேண்டுமானாலும், அருகிலுள்ள கடையிலோ அல்லது எங்குமே, எந்த நாட்டிலும், எளிதாக பணமாக மாற்ற முடியும். உலகெங்கும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு மதிப்பு மிக்கப் பொருள். எந்த ஒரு நகைக்கடையிலும் எளிதாக விற்க முடியும்.

பணவீக்கத்தினை சமாளிப்பது;

இரண்டுமே சமம்தான். ஏனென்றால், இரண்டுமே தங்கத்தின் விலையேற்றத்தை அடிப்படையாக கொண்டவை. தங்கம் பணவீக்கத்தினை அருமையாக சமாளித்து வந்துள்ளது.

செலவு விகிதம்;

காகித தங்கம்செலவு விகிதமானது தங்கத்தின் விலையேற்றத்தில் கழிக்கப்படும்.

அசல் தங்கம்: தங்கத்தின் முதலாளி நீங்களாதலால், யாருக்கும் செலவு விகிதம் தரத்தேவையில்லை.

தங்கத்தின் சுத்தம்;

காகித தங்கம்; 99.5% சுத்தமான தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது.

அசல் தங்கம்: தங்கத்தின் சுத்தமானது மாறுபடலாம்.

அரசின் வரி:

இரண்டுமே சமம்தான். தங்கமானது கடன் பத்திரங்களைப் போல் வரிக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவுவது: 

இரண்டுமே நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவுவதில்லை. பங்குகள், கடன் பத்திரங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவுகின்றன. எனவேதான், அரசு மக்கள் தங்கம் வாங்குவதை குறைக்குமாறு அறிவுறுத்துகிறது.

அரசே தங்கப் பத்திரங்களை, தங்கத்திற்கு பதிலாக வாங்குமாறு அறிவுறுத்துகிறது. அவற்றில் வட்டியும் கூட வழங்குகிறது. இரண்டுமே சமம்தான். இரண்டுமே முதலீட்டின் பரவலாக்கத்திற்கு உதவுகின்றன.

பொருளாதார பிரச்சனை, பணத்தின் அதிக பண வீழ்ச்சி, யுத்தம் போன்ற பிரச்சனை காலங்கள்;

காகித தங்கம்: இது பங்கு சந்தை சார்ந்த திட்டமாதலால், இத்தகைய சந்தர்ப்பங்களில் உதவுவது கடினம்.

அசல் தங்கம்: இது கி.மு 5000 ஆண்டுகளிலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு மதிப்புள்ள உலோகம். எனவே, இத்தகைய சங்கடமாக காலங்களில் கைக்கொடுக்கும்.

என்னைப் பொறுத்தவரை, தங்கமானது நீண்ட காலத்தில் பணத்தினை பெருக்குவதற்கு, பணவீக்கத்தினை சமாளிக்க நல்லதொரு முகாந்திரமாக இருந்தபோதிலும், அதனை விட பங்குசந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதிகள் மற்றும் கடன் பத்திரங்கள் சார்ந்த பரஸ்பர நிதிகளின் தொகுப்பானது அதிகமான லாபத்தினை கொடுத்து வந்துள்ளன.

தங்கமானது, உலகில் நிலவும் கொரோனா வைரஸ் பிரச்சனை, எண்ணை விலை சரிவு, அமெரிக்க டாலரின் மதிப்பில் பிரச்சனை போன்ற காரணங்களினால், திடீரென மிக அதிக ஏற்றத்தினைக் கண்டுள்ளது. கடந்த 9 வருடங்களில், மார்ச் 2010 முதல்(கிட்டத்தட்ட 15000 ரூபாய்), அக்டோபர் 2019ம் ஆண்டு வரை(கிட்டத்தட்ட 30000 ரூபாய்), இரண்டு மடங்கே வளர்ந்துள்ளது. அதாவது, தங்க விதி 72 படி, 72/9 = வருடா வருடம் 8% வளர்ந்துள்ளது. அதில் கூட, 2013 முதல் 2016 வரை விலையில் வீழ்ச்சி கண்டுள்ளது.

ஆனால், திடீரென்று, கடந்த சில மாதங்களில் 45000 ரூபாயினை தொடுகிறது. இது கொரோனோ சார்ந்த பல்வேறு நிகழ்வுகளினால் நடந்துள்ளது. இது எவ்வளவு காலம் தொடருமென்று கூற இயலாது. மறுபடியும், தங்கம் விலை வீழ்ச்சி அடையலாம். எனவே, நீண்ட காலத்தில், பங்கு சந்தையினைப் போல், தங்கமானது நல்லதொரு லாபத்தினைக் கொடுப்பது கடினம்.

இதே காலகட்டத்தில் தேசிய பங்கு சந்தை குறியீட்டினைப்(NIFTY50) நிப்டி 50 குறியீட்டினைப் பார்த்தால், அது சீராக வளர்ந்துள்ளது. 5000 என்ற குறியீடு கிட்டத்தட்ட 12,250 வரை வளர்ந்துள்ளது. அதாவது, கிட்டத்தட்ட 10% வருடாவருடம் வளர்ந்துள்ளது. நீண்ட காலத்தில், நல்லதொரு லாபத்தினைக் கொடுக்கும்.

எனவே, தங்கத்தில் முதலீடு செய்யவேண்டுமென்று முடிவெடுத்தால், இத்தகைய விலையேற்ற காலத்தில் வாங்க வேண்டாம். அதிக நஷ்டத்தினை சந்திக்க நேரிடலாம். இக்காலத்தில், பங்குசந்தையில் குறியீடு சார்ந்த பரஸ்பர நிதியில் வாங்கலாம். நீண்ட காலத்தில் நல்லதொரு லாபத்தினைப் பார்க்கலாம். அது நாட்டின் பொருளாதாரத்திற்கும் உதவுவதும் கூட.

ஆனால், முதலீட்டின் பரவலாக்கத்திற்காக வாங்குவதென்றால், தங்கமாக வாங்குவதென்பது நல்லது. அது அசல் தங்கம் என்பதால் கைகொடுக்கும். தங்கமாக பராமரிப்பது கடினமென்று எண்ணினால், காகித தங்கமாக வாங்கலாம். நீண்டகால முதலீடென்றால், அரசின் தங்க பத்திரங்களை வாங்குவது இன்னும் சிறப்பு. ஏனென்றால், அது தங்கமே அல்ல. தங்கத்திற்கு சமமாக அரசு தரும் உத்திரவாதம். மேலும், வட்டியும் கிடைக்கிறது.