வீட்டு கடனுக்கு தேவையான ஆவணங்கள் | Home Loan Document List Details Tamil.

வங்கிகள் நாம் புதிதாக நிலம் வாங்கி அதில் வீடு கட்டவும், புது வீடு வாங்கவும், புது அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கவும், பழைய வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கவும், இருக்கும் வீட்டை மேம்படுத்தவும் கடன் வழங்குகின்றன. கடன் பெறத் தகுதி என்பது பதினெட்டு வயது முதல் ஐம்பது வயது வரை ஆகும். சில வங்கிகளில் மருத்துவர்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள் அல்லது சட்ட வல்லுநர்கள் எனில் அறுபது வயது வரை அளிக்கின்றனர். கடன் பெறும் நபர் பணியில் இருந்தால் ஓய்வு பெறுவதற்குள் EMI முடிந்து விடுமா என்பதை வங்கிகள் சரிபார்க்கின்றன.

வங்கிகள் கடன் அளிக்கும் என்றாலும் முழுமையாகக் கடன் தராது. 80 சதவீதத்திலிருந்து 85 சதவீதம் வரை வங்கிகள் கடனாகத் தரும். மீதித் தொகை நம் பொறுப்புதான். மீதியைத்தான் கடனாகத் தருவார்கள். இதைக் கட்டுமானம் முடிய முடிய மூன்று நான்கு தடவையாகப் பிரித்து தருவார்கள். வீட்டின் விலை அல்லது தோராயமான மதிப்பீட்டின் எண்பது சதவீதம் கடனாகக் கிடைக்கும் என்றாலும் ஒருவரின் வருமானத்துக்கு தக்கபடிதான் கடன் தொகை நிர்ணயிக்கப்படும்.



25 - 30 வயதில் வீடு வாங்க நினைத்தால் நம் சம்பளத்தைப் போல எழுபது மடங்கு கிடைக்கும் என்றும் 45 வயதிற்கு கீழ் என்றால் நம் சம்பளத்தைப் போல ஐம்பது முதல் அறுபது மடங்கு வரை கிடைக்கும் என்றும் 45 வயதிற்கும் அதிகம் மற்றும் சுயதொழில் செய்பவர் என்றால் நம் ஆண்டு வருமானத்தைப் போல நான்கு அல்லது ஐந்து மடங்கு கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதி நம்மிடம் இருக்கிறதா என வங்கிகள் பரிசீலிக்கும். பிற EMI போக, வீட்டுக் கடன் போக நம்மிடம் சம்பளத் தொகையில் முப்பத்தைந்து சதவீதமேனும் இருந்தால் மட்டுமே இன்றைய காலகட்டத்தில் வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க முடியும். இதைக் கருத்தில் கொண்டே வங்கி தன் கடன் தொகையை நிர்ணயிக்க முன்வரும்.

கூடுதல் கடன்: 

வீடு கட்டி முடித்த பின் உள் அலங்காரம் செய்ய அல்லது வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க வங்கியில் ‘Top Up Loan’ எனும் வசதி மூலம் கூடுதலாகக் கடனையும் பெற முடியும். அதன்படி கடன் தொகையிலிருந்து பதினைந்து சதவிகீதம் கிடைக்கும். ஆனால் மூன்று வருடங்களுக்கு பிறகு மட்டுமே கிடைக்கும். செயல்முறை கட்டணம் என்று அளிக்கப்படும் கடன் தொகையின் 1 சதவீதத்தை வங்கி எடுத்துக்கொள்ளும். வங்கிகளுக்கு வங்கி வித்தியாசப்படும். பிற வங்கிகளிலிருந்து கடனை எடுத்துக் கொள்ளும் வசதியும் பல வங்கிகளில் உண்டு. அதாவது பாதி கடன் செலுத்திய நிலையில் நாம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வேறு வங்கியில் நம் கடனை மாற்றிக் கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்:
பொதுவாக நாம் வங்கிகளில் விண்ணப்பிக்கும்போது நம்முடைய ஆவணங்கள் அனைத்தையும் பரிசீலித்துத் தயார் நிலையில் வைத்திருப்பது நல்லது.

• பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்

• விண்ணப்பதாரரின் புகைப்படம்

• புகைப்படத்துடன் கூடிய 

• அடையாளச்சான்று

• முகவரிச்சான்று

• வயதுச் சான்று (பத்தாவது அல்லது   பன்னிரெண்டாவது வகுப்பின்  மதிப்பெண் பட்டியல்)

• மனைப் பத்திரம் (சார் பதிவாளர் 

• அலுவலகத்தில் பதிவு செய்தது)

• தாய்ப்பத்திரம்

• வில்லங்கச் சான்றிதழ்

• விற்பனைப் பத்திரத்தின் நகல்

• சட்ட வல்லுநரின் கருத்து

• வீட்டிற்கு உண்டான வரைபடம், 

• அங்கீகாரம் நகல்

• வீட்டின் மதிப்பீடு, கட்டுமான செலவு ஆகியவற்றின் பொறியாளர் அறிக்கை

• வருமானச் சான்றிதழ்

• கடந்த ஆறு மாதத்துக்கான வங்கி   பாஸ்புக் நகல்

• வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்த படிவத்தின் நகல்

• பான் அட்டையின் நகல்

வட்டி விகிதம்:

‘Fixed Interest Rate’ சிறந்ததா..? அல்லது காலத்திற்கேற்ப மாறும் ‘Floating Interest Rate சிறந்ததா..? என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். Fixed வட்டி விகிதத்தில் ஒருவர் கடன் பெறுகிறார் என்றாலும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நிலையான வட்டி விகிதத்தில் மாற்றங்கள் இருக்கலாம் என்ற விஷயத்தை கவனிக்க வேண்டும். மேலும், ‘Floating’ வட்டி விகிதங்களில், வட்டி குறையும் சந்தர்ப்பங்களில் சிறிய அளவில் பலன்கள் கிடைக்கும் நிலையும் இருக்கும். அதனால் வீட்டு கடன்களுக்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கவனமாக படித்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வது நல்லது.

டவுன் பேமண்ட்:

வீட்டுக் கடனில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை செலுத்துவது ‘Down Payment’ ஆகும். ஒவ்வொரு வங்கிக்கும் வித்தியாசப்படும் என்ற நிலையில் ரூ.10 லட்சம் வீட்டுக் கடன் பெறும்போது அதில் ரூ.1 லட்சம் அல்லது ரூ.2 லட்சம் அளவுக்கு ‘Down Payment’–ஆக இருக்கலாம். கடன் பெறும் சமயத்தில் இந்த தொகை கையில் இருப்பது அவசியம். மேலும், சந்தை மதிப்பைவிடவும் குறைந்த அளவில் வங்கி ஒருவரது சொத்தை மதிப்பீடு செய்தால் மீதம் இருக்கும் தொகையை கடன் பெறுபவர் செலுத்தவேண்டும். அதனால் சொத்தை முன்னதாக சுய மதிப்பீடு செய்து உத்தேச தொகையை கையில் வைத்திருப்பது நல்லது.

தடையில்லா சான்று மற்றும் பத்திரங்கள்: 

தடையில்லா சான்றுகளை வங்கி கேட்கும் வடிவங்களில் கொடுக்க வேண்டியது அவசியமாகும். அவற்றை சரியான வடிவங்களில் மற்றும் சரியான நேரங்களில் தராமல் இருந்தால் வீட்டுக் கடன் கிடைப்பதில் தாமதம் ஆகும். அதனால், வங்கிகள் எதிர்பார்க்கும் சகல ஆவணங்களையும் விசாரித்து தயாராக வைத்திருந்து ஒப்படைப்பதும் அவசியம்.

முன்னுரிமை:

பொதுவாக, CIBIL Score 300 முதல் 900 வரையில் அளிக்கப்படும் நிலையில், வங்கிகள் 750 மதிப்பெண்களுக்கு மேல் இருப்பவர்களுக்கு கடன் அளிப்பதில் முன்னுரிமை தருகின்றன. அதாவது, கடன் கேட்பவர் கடந்த 6 மாத காலத்தில் பெற்ற கடன்களின் பின்னணி அடிப்படையாக கொள்ளப்படும். அதிக ஸ்கோர் பெற்றவர்கள் குறைந்த ‘Risk’ உடையவர்களாகவும், குறைந்த ஸ்கோர் பெற்றவர்கள் அதிக ‘Risk’ உடையவர்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.

வீட்டு கடன் மீதான வருமான வரி நன்மைகள்:

• மத்திய பட்ஜெட்டில் வருமான   வரி சலுகைகளை வீட்டுக் கடன்களின் வட்டி செலுத்துதலில் ரூ. 1.5 லட்சம் உயர்த்தும் திட்டத்தை கொண்டு வந்தது. இதனால், கடன் வாங்குபவர்கள் இப்போது ரூ. 3.5 லட்சம் வரை பெறலாம்.

• இந்த விலக்கு பிரிவு 80EEA-இன் கீழ் கிடைக்கிறது, இது செலுத்தப்பட்ட வீட்டுக் கடன் வட்டிகளில் ரூ. 1.5 லட்சம் வரை வருமான வரி நன்மைகளை வழங்குகிறது. 

• வீட்டுக் கடன் வரி சலுகைகள் பிரிவு 24(b)-இன் கீழ் தற்போதுள்ள ரூ. 2 லட்சம் விலக்குக்கு மேல் மற்றும் அதற்கு மேலும் கிடைக்கின்றன.

• வீட்டுக் கடன் வரி விலக்குகளை முத்திரையிடப்பட்ட மதிப்பு ரூ. 45 லட்சம் வரையுள்ள வீடுகளை வாங்க மட்டுமே கோர முடியும்.

• பிரிவு 80EEA-இன் கீழ் வருமான வரி சலுகைகள் PMAY CLSS திட்டத்தின் கீழ் வீட்டுக் கடன்களைப் பெறுபவர்களுக்கு கிடைக்கின்றன.