கிசான் விகாஸ் பத்திரம் பற்றிய விளக்கம்? Kisan Vikas Patra Details In Tamil.

இந்திய தபால் துறையில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களில், மிக மிக முக்கியமான சேமிப்பு திட்டம் தான் KVP என்ற கிசான் விகாஸ் பத்திரம். இது சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் லாபகரமான மற்றும் பாதுகாப்பான ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

முதலீட்டு தொகை இருமடங்கு:

இந்த திட்டத்தின் மூலம் சேமிக்க விரும்புவர்கள் குறைந்தபட்சம், ஆயிரம் ரூபாய் முதல் முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்ச முதலீடு என எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் 50,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால், உங்களது Pan Card கொடுக்க வேண்டும். இதே 10 லட்சம் மற்றும் அதற்கு மேல் நீங்கள் முதலீடு செய்யும் போது உங்களது வருமானத்திற்கான ஆவணத்தினை (சம்பளம் சர்டிபிகேட்) நீங்கள் கொடுக்க வேண்டும். நீங்கள் முதலீடு செய்யும் தொகையானது 124 மாதங்கள், அதாவது 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் கழித்து இரட்டிப்பாகிறது.

எவ்வளவு வயது இருக்க வேண்டும்:

அரசின் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய 18 வயது பூர்த்தியடைந்த எந்த ஒரு இந்தியக் குடிமகனும், இந்த திட்டத்தில் இணைய தகுதியானவர்கள் தான். இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய வங்கிக் கணக்கு தேவையில்லை. ஒரு குழந்தை அல்லது முதியவர்களுடனும் இணைந்தும் முதலீடு செய்யலாம். அப்படி இணையும் போது குழந்தையின் வயது, பாதுகாவலரின் பெயர் அல்லது பெற்றோர் பெயரை மறக்காமல் கொடுக்க வேண்டும். இந்த பத்திரத்தினை அறக்கட்டளைகள் கூட வாங்கலாம், ஆனால் NRI- கள் வாங்க முடியாது.

எப்படி விண்ணப்பிக்கலாம்:

கிசான் விகாஸ் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் சென்று, தங்களது அடையாள மற்றும் முகவரி ஆவணங்களைச் சமர்ப்பித்து சேமிப்பைத் துவங்கலாம். குழந்தைகளின் பெயரில் அவரது பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்கள் முதலீடு செய்யலாம்.

பாஸ்புக் வசதியும் உண்டு:

அரசின் இந்த கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் இணைந்தவுடன் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் சென்று அதற்கான பாஸ்புக்கை முதலீட்டாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த சேமிப்பு திட்டத்தில் விண்ணப்பதாரர் எதிர்பாராத வகையில், மரணமடையும் பட்சத்தில், அவரால் பரிந்துரைக்கப்பட்ட நாமினி அல்லது மற்றவர்கள், முதிர்ச்சித் தொகையைப் பெறுவதற்கான வசதியும் உண்டு. ஆக நீங்களே ஒரு வேளை இல்லாவிட்டலும் உங்கள் பணம் பாதுகாப்பாக உங்களைச் சேர்தவர்களுக்கு பாதுகாப்பாக செல்லும்.

இடையில் பணத்தினை எடுக்க முடியுமா:

முதலீட்டாளர்கள் விரும்பினால் இந்த சேமிப்புத் திட்டத்தை மற்றொருவரின் பெயருக்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு. அப்படி இல்லை எனில் ஒருவேளை முன்கூட்டியே பணத்தைப் பெற விரும்பினாலும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அதற்கு இந்த திட்டத்தில் சேர்ந்து 30 மாதங்கள் நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம். எனினும் நீங்கள் பணத்தைப் பெறும் நாள் வரை வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வரி விலக்கு:

அரசின் இந்த கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்குத் தங்களது பங்களிப்பு மற்றும் லாபம் என இரண்டுக்கும், மற்ற திட்டங்களை போல் வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதில்லை. எனினும் முதிர்வு காலத்திற்கு பிறகு எடுக்கும்போது டிடிஎஸ் விலக்கு அளிக்கப்படுகிறது.

கிசான் திட்டத்தின் பயன்கள்:

இந்த திட்டத்தில் சந்தை ஏற்ற இறக்கத்தினை பொருட்படுத்தாமல் கணிசமான லாபம் உண்டு. இந்த திட்டமானது விவசாய சமூகத்தினை நோக்கமாக கொண்டுள்ளதால், மழைக்காலங்களில் சேமிக்க ஊக்குவிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் உள்ள மற்றொரு பெரிய நன்மை என்னவெனில் முதலீட்டுக்கு எந்த பங்கமும் கிடையாது. மாறாக உங்களுக்கு கணிசமான வருமானம் உண்டு.
 
KVP திட்டத்திற்கு எதிராக கடன் பெற முடியுமா:

பொதுவாக அரசின் பல சேமிப்பு திட்டங்களில் அதனை பிணையாக வைத்து கடன் பெற முடியும். அதனை போல கிசான் விகாஸ் பத்திரத்தினை வைத்து கடன் வாங்க முடியுமா? என்றால் நிச்சயம் முடியும். அதோடு இவ்வாறு பிணையாக வைத்து வாங்கும் கடன்களுக்கு, மற்ற கடன்களோடு ஒப்பிடும்போது வட்டி விகிதமும் சற்று குறைவாகவே இருக்கும்.

எவ்வளவு வட்டி விகிதம்:

இந்த சேமிப்பு திட்டத்திற்கும் மற்ற சேமிப்பு திட்டங்களை போலவே அரசு காலாண்டுக்கு ஓரு முறை வட்டி விகிதத்தினை மாற்றியமைக்கிறது. கடந்த இந்த காலாண்டில் வட்டி விகிதம் 7.2%. எனினும் இதன் பிறகு இன்னும் வட்டி விகிதம் மாற்றியமைக்கப்படவில்லை.