உலகின் எட்டாவது அதிசயம் கூட்டு வட்டி | Compound Interest is the Eighth Wonder of The World.

உலகின் எட்டாவது அதிசயம் என்று ஒன்றிருந்தால் அது தான் கூட்டு வட்டி, அதை புரிந்து கொண்டவர் சம்பாதிக்கிறார், புரிந்து கொள்ளாதவர் ஏழை ஆகிறார் என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு முறை கூறியுள்ளார்.

அதிசயம் என்று கூறும் அளவிற்கு அப்படி என்ன செய்கிறது அந்த கூட்டு வட்டி???

வட்டிகளின் வரையறைகள்:

எளிய வட்டி - நமது அசலின் ஆரம்ப தொகையை மட்டும் வைத்து கணக்கிடப்பட்டு கொடுக்கப்படும் வட்டியாகும்.

கூட்டு வட்டி - நமது ஆரம்ப கால அசல் மற்றும் முந்தைய காலங்களில் அந்த அசலிற்கு நாம் பெற்ற வட்டி . இந்த இரண்டையும் சேர்த்து கணக்கிடப்பட்டு கொடுக்கப்படும் வட்டியாகும்(உங்கள் வட்டிக்கு வட்டி சம்பாதிக்கிறீர்கள்). ஒரு குட்டிக்கதையின் மூலம் கூட்டு வட்டியின் நம்ப முடியாத சக்தியை பற்றி பார்ப்போம்.


உங்களுக்கும் உங்கள் நண்பர் சோமுவிற்கும் தலா 10 லட்சம் லாட்டரி பரிசு கிடைக்கிறது. இருவரும் அதை ஒரு வங்கி சேமிப்பில் போட்டு வைக்க முடிவு செய்கிறீர்கள்.

எளிய வட்டி வங்கி ஆண்டொன்றிற்கு 10% எளிய வட்டி தருவதாக கூறுகிறது. கூட்டு வட்டி வங்கி ஆண்டொன்றிற்கு 8% கூட்டு வட்டி தருவதாக கூறுகிறது(இங்கு குறிப்பிட்டுள்ள வட்டி சதவிகிதம் விளக்கத்திற்காக மட்டுமே).

சோமு எளிய வட்டி வங்கி தரும் 10% அதிகமாக இருப்பதால் தனது 10 லட்சத்தை எளிய வட்டியில் இருப்பு வைத்து விடுகிறார்.

நீங்கள் ஐன்ஸ்டீன் கூறிய வாசகத்தை முன்னரே வாசித்திருந்ததால் அதை 8% கூட்டு வட்டி வங்கியில் இருப்பு வைத்து விடுகிறீர். எளிய வட்டி வங்கி சோமுவிற்கு வருடம் 1 லட்சம் வட்டியாக வழங்கும்(10 லட்சம் அசலிற்கு 10% வட்டி).

உங்களது கூட்டு வட்டி வங்கி உங்களுக்கு முதல் வருடம் 80 ஆயிரம் வட்டியாக வழங்கும்(10 லட்சம் அசலிற்கு 8% வட்டி), 2-வது வருடம் 86 ஆயிரம் வழங்கும்(10 லட்சத்தி 80 ஆயிரத்திற்கு 8% வட்டி). வருடங்கள் போக போக உங்களது வட்டி ஏறிக்கொண்டே போகும், ஆனால் சோமுவிற்கு அதே வட்டி தான் வருடா வருடம் வரும்.

ஒரு வருடம் கழித்து சோமுவிடம் 11 லட்சங்கள் உள்ளது உங்களிடமோ 10 லட்சத்தி 80 ஆயிரம் தான் உள்ளது. சோமு தனது நிதி அறிவை பற்றி பெருமிதம் கொள்கிறார். உங்கள் அறியாமையை ஏளனமும் செய்கிறார்.

7-வது வருடத்தில் நீங்கள் சோமுவை முந்தி செல்கிறீர்கள். 20 வருடங்கள் கழிந்தது, சோமுவின் இருப்பில் 30 லட்சங்கள் உள்ளது ஆனால் உங்கள் இருப்பிலோ 47 லட்சங்கள் உள்ளது.

30 வருடங்கள் கழிந்தது, சோமுவின் இருப்பில் 40 லட்சங்கள் உள்ளது. ஆனால் நீங்களோ 1 கோடியை தொட்டு விட்டீர்.

இதனால் தான் ஐன்ஸ்டீன் கூட்டு வட்டியை அதிசயங்களில் ஒன்றாக கருதியுள்ளார். முதலீடு என்று வரும் பொழுது எப்பொழுதும் ஐன்ஸ்டீன் வாசகத்தை நினைவு படுத்திக்கொள்ளுங்கள். கூட்டு வட்டி மற்றும் நீண்ட காலம் இந்த இரண்டும் சேர்ந்தால் உண்மையிலியே பல அதிசயங்களை செய்து விடும்.

தனது 20-களில் இருக்கும் நண்பர்கள் இதுவரை எந்த முதலீடும் செய்யவில்லையெனில் உடனே ஒரு Mutual Fund அல்லது நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்தோ மாதம் சிறிது தொகை முதலீடு செய்து வந்தீர்கள் எனில் உங்களது ஓய்வு காலத்தில் அது வளர்ந்து மிக பெரும் தொகையாக மாறிவிடும். சிறந்த ஐந்து மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் | 5 Best Mutual Funds Investment Details In Tamil.