வெற்றிக்காக பாடுபடும் ஒவ்வொருவரும் அவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும் என்பதை புரிந்துகொள்கிறார்கள். இருப்பினும், ஒரு விருப்பம் போதாது. உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதற்கு நீங்கள் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். அதனால்தான் வெற்றியை நோக்கிய முதல் படி நீங்கள் நினைக்கும் விதத்தில் முழுமையான மாற்றமாக இருக்க வேண்டும். புதிய தோற்றத்துடன் உலகைப் பாருங்கள். எல்லாம் உங்கள் கைகளில் மட்டுமே உள்ளது.
மக்கள் மூன்று நிலைகளில் செல்வந்தர்கள் ஆகின்றனர். மூன்று நிலைகளுமே முக்கியம். ஒரு நிலையில் முன்னேறாமல் அடுத்தநிலைக்கு செல்ல இயலாது.
முதல் நிலை - அதிகமாக சம்பாதிப்பது.
இரண்டாவது நிலை - சம்பாதித்த பணத்தில், அதிகமாக சேமிப்பது.
மூன்றாவது நிலை - சேமித்த பணத்தில் பரவலாக முதலீடு செய்வது.
அதிகமாக சம்பாதிப்பது:
நல்ல ஒரு வேலையிலோ, நல்ல ஒரு தொழிலிலோ நல்ல ஒரு சம்பாத்தியத்தினைப் பெறுவது. குறைவாக சம்பாதிக்கும் பட்சத்தில், சம்பாதிக்கும் பணமானது, வாழ்க்கை கடத்தும் அளவிற்கே உதவும். இவ்வாறு, அதிகமாக சம்பாதிக்க என்ன செய்ய முடியும் என்பதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.
சம்பாதித்த பணம் போதவில்லை என்றால், கணவன், மனைவி இருவரும் வேலைக்கு போவது
தொழில் சார்ந்த பயிற்சியில் ஈடுபட்டு, தன் திறனை வளர்த்து வேறு வேலையோ, அல்லது பதவி உயர்வோ அடைவது
சம்பாதிக்கும் நபர், பகுதி நேரமாக , மற்றொரு வேலையிலோ, தொழிலிலோ இறங்குவது
நமக்கு தெரிந்த, பிடித்த விஷயங்கள் சார்ந்த தொழிலில் இறங்குவது.
சம்பாதித்த பணத்தில், அதிகமாக சேமிப்பது:
சம்பாதித்த பணத்தை, இழக்காமல் , அதிக அளவில் சேமிக்கப் பார்க்க வேண்டும். சிலர் மாத சம்பளத்தில், 10% சேமிப்பர். 50 - 70% சேமிக்கும் மக்களும் உள்ளனர். இந்தப் படியானது, முதல் படியை விட எளிமையானது தான். சம்பாதித்த பணம் ஏற்கனவே உள்ளது. அதனை எவ்வாறு சேமிப்பது என்று யோசிக்க வேண்டும். இதற்கு சில விஷயங்கள் முக்கியம்.
சிக்கனமான வாழ்க்கை வாழுவது:
எந்த ஒரு வீண் செலவும் செய்யாமல், பணத்தை திட்டமிட்டு(Budget) செலவழித்து வாழ வேண்டும். பணத்திட்டத்திற்குள்ளாக, வாழ்க்கை நடத்த வேண்டும். கடன்களை அறவே ஒதுக்க வேண்டும். சம்பாதித்த பணமானது, கடன்களை கட்டுவதற்காக மாட்டிக் கொண்டு விட்டால், முதலீட்டிற்கு பணம் ஒதுக்க முடியாது. கடன்களை அறவே ஒதுக்க வேண்டும். கடன் உள்ள மனிதன், அடிமை மனிதன். எதிர்காலத்தினை அவன் கடனிடம் அடகு வைக்கிறான்.
அவசர கால நிதியினை வைத்திருக்க வேண்டும்:
அவசர கால நிதியானது, வீட்டின் அவசர தேவைகளில், பிறரை கையேந்தாமல் சமாளிக்க உதவும். கடனைத் தவிர்க்கும்.
உடல்நல, காலவரை சார்ந்த காப்பீட்டுத் திட்டத்தினை கொள்ள வேண்டும்; காப்பீட்டுத் திட்டமானது, திடீரென்று வரும் அவசர மருத்துவ தேவைகளுக்கு, கடன் வாங்காமல் காக்கும். வாழ்க்கையின் மீது நம்பிக்கையைத் தரும்.
தேவை சார்ந்த வீடு, வாகனங்கள் வாங்க வேண்டும்; வீடும், வாகனமும் ஒருவரின் வாழ்வின் மிகப் பெரிய செலவுகள். அவை தேவைக் கேற்றபடி வாங்க வேண்டும். இல்லையேல், பெரிய கடன் சுமையில் சிக்க வைத்து விடும்.
சம்பாதித்த பணத்திற்குள்ளாக வாழ்க்கை நடத்துவது. செலவானது என்றும் வரவினைத் மீறாமல், கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து, பணத்தை சேமிப்பது.
ஒவ்வொரு செலவினையும் கவனமாக செய்வது:
உணவகத்தில் சாப்பிடுவது, திரைப்படம் பார்ப்பது, என்று ஒவ்வொரு விஷயத்திலும் பார்த்து பார்த்து, பணத்தை சேமிப்பது அவசியம். அலுவலகம் சார்ந்த, அங்காடி சார்ந்த எந்த ஒரு சலுகைகளையும் உபயோகப்படுத்திக் கொள்வது. எந்த ஒரு நியாயமான சலுகைகளின் மூலம் பணத்தினை சேமிப்பது
அதிக பணம் சம்பாதித்தாலும், வாழ்க்கைத் தரத்தை என்றுமே மாற்றாமலிருப்பது.
இதனை ஆங்கிலத்தில், Lifestyle inflation என்று கூறுவர். அதிகமாக சம்பாதிக்கும் போது, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வது. இது மீண்டும் அதிக பணத்தை இழக்க வைக்கும். அதிகமாக பணம் சம்பாதித்தாலும், வாழ்க்கைத் தரத்தை முன்பு போலவே, சிக்கனமாக வாழ்ந்து, பணம் சேமிப்பது. குறிப்பு எல்லாவற்றிற்கும் மேலாக, சேமித்த பணத்தில், சமூக நன்மைக்காக ஒதுக்குவது முக்கியம். தன்னை ஆளாக்கிய, வாழ வைக்கும், சமுதாயத்தில் தன் கடனை செலுத்துவது, மனிதனின் கடமை.
சேமித்த பணத்தினை பரவலாக முதலீடு செய்வது:
சேமித்த பணம், முதலீடு இன்றி, பணவீக்கத்தினை எதிர்கொள்ள முடியாது. இங்கு பரவலாக என்ற வார்த்தை முக்கியம். ஒரு முதலீடு தோற்றாலும், இன்னொன்று காப்பாற்றி விடும். இந்த முதலீடானது, சீக்கிரமாக தொடங்கப்பட்டு, நீண்ட நாட்களுக்கு, தொந்தரவு செய்யாமல், வளர வைக்கப்பட வேண்டும். முதல் இரண்டு படிகளைக் கடந்தால் மட்டுமே, இங்கு வர முடியும். அதிகம் சம்பாதித்தால் தான் , தேவை போக சேமிக்க முடியும். சேமித்தால் தான் முதலீடு செய்ய முடியும். இவற்றிற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.
• பங்குகளின் Dividend தொகையை மறு முதலீடு செய்வது, ஈவுத் தொகையை செலவழிக்காமல் மறு முதலீடு செய்வது.
• Mutual Fund-களில் முதலீடுகள் செய்வது. பரஸ்பர நிதிகள் பரவலாக முதலீடு செய்வதால் பணத்தை இழக்கும் வாய்ப்பு குறைவு.
• தொழிலினை பெருக்கி, விரிவு படுத்துவது; தொழிலில் அதிகமாக முதலீடு செய்வதன் மூலம், விரிவு படுத்தி, பணத்தினைப் பெருக்குவது
அரசாங்க வரி சலுகை சார்ந்த
முதலீடுகளில் முதலீடு செய்வது:
பொது ஓய்வுகால வைப்பு நிதி (PPF), தேசிய சேமிப்புத் திட்டம் (NPS) , கிஸான் விகாஸ் பத்திரம் (KVP), தேசிய ஓய்வூதிய திட்டம் போன்ற வரிசலுகை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வது. இங்கு வளரும் பணமானது, முழுமையாக கிடைக்கிறது. அரசின் தொழில் சார்ந்த திட்டங்களை உபயோகப்படுத்திக் கொள்வது.
முதலீடுகளை நீண்ட காலம் தொடர்வது:
முதலீடுகள் பணம் தர, காலம் ஆகும். அது வரை, பொறுமையாக காத்திருந்து முதலீட்டினை வளர விடுவது. நடுவில் எடுப்பது என்பது தங்க முட்டையிடும் வாத்தினை வெட்டுவதற்கு சமம். அடிக்கடி விதையினை தொந்தரவு செய்தால், விதையானது மரமாக வளராது. நன்கு தண்ணீர் ஊற்றி வளர்க்கப்படும் விதை, மரமாக மாறி, கனிகளைக் கொடுக்கும்.
பரவலாக முதலீடு செய்வது:
ஒரே தொழிலில் என்று இல்லாமல், பல தொழில்களில் இறங்குவது. ஒரே முதலீடு என்று இல்லாமல், பங்கு சந்தை சார்ந்த பரஸ்பர நிதி, கடன் பத்திரம் சார்ந்த பரஸ்பர நிதி, பங்குகள், தங்கம், நிலம் என்று முதலீட்டினை பரவலாக்குவது.
திடீரென்று கிடைக்கும் பெரும் பணத்தை உடனே முதலீடு செய்வது; ஏதேனும் தொழிலில், அல்லது அலுவலகத்தில் கிடைக்கும் உபரி பணத்தினை உடனே முதலீடு செய்வது. வீண் செலவு செய்யாமலிருப்பது.
தன் தொழிலில், தன் திறன்களில் முதலீடு செய்வது:
இத்தகைய முதலீடானது, தன் அலுவலகத்தில் எதிர்காலத்தில் அதிக சம்பள உயர்வு பெற வழிவகுக்கும். தொழிலில் முதலீடு தொழிலினைப் பெருக்கும்.
தொடர்ந்து முதலீடு செய்வது; பங்கு சந்தை ஏற்ற இறக்கங்கள், பொருளாதார மந்தம் என்பதைப் பற்றி கவலைப்படாமல், என் கடன் முதலீடு செய்வதே என்று தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.
முதலீட்டினை எந்த காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது.
இவ்வாறு, முதலீடு செய்த பணமானது, கூட்டு வட்டித் த த்துவத்தின்படி, பல்கிப் பெருகி, பெரும் பணமாக மாறி பணக்கார மனிதனாக மாற வைக்கும். தொழில் முதலீடு செய்த பணமானது, தொழிலைப் பெருக்கி, பணத்தைப் பெருக்கி, பணக்கார மனிதனாக மாற்றும்.
மனிதர்கள் படிப்படியாக பணக்காரர் ஆகின்றனர். அதற்கு பொறுமை வேண்டும். மூன்று படிகளில் ஒன்றில் சறுக்கினாலும், பணக்காரர் ஆக முடியாது. எவருமே, ஒரே நாளில் பணக்காரர் ஆக முடியாது.
முக்கியமான சில குறிப்புகள்:
• உங்கள் ஒருவரின் உழைப்பு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே உங்களை செல்வந்தராக்கும். உங்கள் முன்னேற்றத்துக்கு மற்றவர்களும் உழைக்க வேண்டும், நீங்கள் முதலாளியாக, மற்றவர்கள் தொழிலாளியாக.
• உங்கள் தொழில்களில் ஒன்று மக்களால் தவிர்க்க முடியாத இன்றியமையாத பொருளை, அவர்களுக்கு ஏற்ற விலையில் தர வேண்டும். இதில் சமூகத்தின் நடுத்தர வர்க்கமும், ஏழை வர்க்கமும் உங்களை பின்தொடர்வார்கள். எல்லா காலத்திலும் இவர்கள்தான் உங்கள் தொழிலின் அச்சாணி.
• மற்றொரு தொழில், சமூகத்தில் பணம் செலவு செய்ய தயங்காதவர்களை குறி வைப்பதாக, ஆடம்பர துறையை சார்ந்து இருக்க வேண்டும். இவர்களை கவர்வது சுலபமல்ல. ஆனால் இவர்களால்தான் உங்களுக்கு அதிக லாபம்.
• எல்லா தொழிலிலும் உங்களுக்கு நம்பிக்கையானவர்கள் கிடைப்பது கடினம். தொழிலில் பரிமாற்றம் செய்யும் ஒவ்வொரு ரூபாயும் ஆவணப்படுத்த வேண்டும்.
•வியாபாரத்தில் உங்கள் போட்டியாளரே உங்கள் குரு.
'உளவின்றி வெல்லாது தொழில்'
•ஊரில் அதிக செல்வாக்கு, மற்றும் அதிகாரத்துடன் இருப்பவரின் தொடர்பு உங்கள் தொழில் பாதுகாப்புக்கு முக்கியம். அடிக்கடி அவரை 'கவனிப்பதும்' அவசியம்.
• தொழில்நுட்பத்தை முழுமையாக உபயோகியுங்கள். இருந்த இடத்திலிருந்து உலகளாவிய வேலைகளை முடியுங்கள்.
• லட்சியத்தை அடையும் வரை அப்பாவித்தனத்தையும், அதிக இரக்கத்தையும் தவிருங்கள்.
• உங்கள் பணம், தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும் இடத்தில் இருக்க வேண்டும். (Investments)
• இறுதியாக, போராடி சேர்த்த பணம் போரடிக்கும் நிலை வரும்போது சிறிது நல்லது செய்யுங்கள்.