செலவு – சேமிப்பு என இருமுகம் கொண்டது பணம். செலவு என்கிற புனைப்பெயரில் இருக்கும் ‘பணத் தேவை’, மூன்று வடிவம் தாங்கி நம் முகம் பார்த்து காத்திருக்கிறது. அவை, தினத் தேவை, மாதத் தேவை மற்றும் வருடத் தேவை என்று பிரிக்கலாம்.
காபி குடிப்பது முதல் காய்கனி வாங்குவது வரையான செலவுகளை தினத் தேவையாகவும், வீட்டு வாடகை, மின் கட்டணம் போன்றவை மாதத் தேவையாகவும் நமக்கு பழகிப் போனவை. பிள்ளைகளின் கல்விக் கட்டணம், மருத்துவப் பரிசோதனை, வீடு பராமரிப்பு, ஆன்மிக பயணச் சுற்றுலா ஆகியவை தவிர்க்க முடியாத ஆண்டுத் தேவைகளாக ஆகிக் கொண்டிருப்பவை.
இந்த முக்கால தேவைகளுக்கு முத்தாய்ப்பாக நான்காவது வகை பணத் தேவை ஒன்று உண்டு. அதுதான், ஆயுள் தேவை! திருமணம் செய்துகொள்ளுதல், திருமணம் செய்து வைப்பது, வீடு கட்டுதல் போன்றவை எல்லாம் ஆயுட்கால தேவைகள்தான். ‘நல்லதொரு நான்கு சக்கர வாகனம் வாங்க வேண்டும்’ என்பதும் ஆயுள் தேவைகளின் பிற்சேர்க்கையாக தற்போது ஆகிவருகிறது.
செலவுகளில் தவிர்க்கக்கூடிய செலவு தவிர்க்க முடியாத செலவு என இரு வகை இருக்கலாம். ஆனால், சேமிப்பு என்பது தவிர்க்க முடியாதது. செலவு எனும் சிற்றோடை திடீரென பெருவெள்ளமாக மாறி நம்மை சூழ்ந்துகொள்ளும் சமயங்களில் தப்பித்துக் கொள்ள உதவும் படகுதான் நம் கையிருப்பிலுள்ள சேமிப்பு. எனவேதான், சேமிப்பு என்னும் சேவை முகத்தை நமக்கு அறிமுகம் செய்து, பல்வேறு சேமிப்புத் திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகிறது அரசாங்கம்.
சேமிக்கும் பணத்துக்கு வரிச் சலுகை, அதற்கான வட்டிக்குச் சலுகை என பல்வேறு சலுகைகளையும் தந்து சேமிப்பை ஊக்குவித்து வருகிறது.
இந்தியா முழுவதும் உள்ள அரசு ஊழியர்களின் எண்ணிக்கை பல லட்சம். இவர்களுக்கு நிச்சயமான வருவாய் உண்டு என்றாலும் எதிர்கால சேமிப்பு என்பது இன்னும் பலருக்கு கேள்விக் குறியாகவே இருக்கிறது. உத்தியோகத்தில் இருக்கிற வரை ராஜா போல வாழ்ந்துவிட்டு, ஓய்வு பெற்றபின் பொருளாதாரக் கடமைகளை நிறைவேற்ற போதிய வசதி இல்லாமல் தவிக்கும்போது அவர்கள் படும்பாடு அளவில்லாதது.
இந்தப் பொருளாதாரச் சிக்கலில் சிக்காமல், அரசு ஊழியர்களும் தங்கள் வாழ்க்கையில் கோடீஸ்வரர் களாக ஆவதற்கு மிக முக்கியமான ஒரு வழிதான் ஊதிய உயர்வு சேமிப்புத் திட்டம். மாத ஊதியம் பெறுவோருக்கான இந்த சேமிப்புத் திட்டத்தை, நாம் ஊதிய உயர்வு சேமிப்புத் திட்டம் (Increment saving scheme) என்று அழைக்கலாம். ஓய்வு காலத்தை பாதுகாக்க செய்ய வேண்டியது என்ன | What Needs To Secure Retirement Details In Tamil.
எந்த ஒரு வேலையில் இருப்போருக்கும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஊதியமானது உயர்ந்து கொண்டுதான் போகிறது. இதை ஊதிய உயர்வு என்கிறோம். அரசுப் பணியில் உள்ளவர் களுக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு தரப்படுகிறது. எடுத்துக்காட்டாக, அரசுப் பணியில் இளநிலை உதவியாளர் பதவியை எடுத்துக்கொள்வோம்.
ஒருவர் 2015-ம் ஆண்டு ஜனவரியில் இந்தப் பணியில் சேர்ந்தவர் எனில், அவர் பணியில் சேர்ந்தபோது பெற்ற ஊதியம் இப்படி இருக்கும்:
அடிப்படை ஊதியம் + தர ஊதியம் (Grade pay) = ரூ.5,200 + ரூ.2,400 = ரூ.7,600-ஆக இருக்கும். இதற்கு 113% அகவிலைப்படி என்று கணக்கிட்டால், ரூ.8,588 கிடைக்கும். இந்த இரண்டையும் கூட்டினால், மொத்த சம்பளம் ரூ.16,188-ஆக கிடைக்கும். ஆண்டு தோறும் ஊதியம் + தர ஊதியத்தின் கூட்டுத் தொகையில் 3% ஊதிய உயர்வு தரப்படுகிறது.
அந்த வகையில் ரூ.7,600-ஆக இருந்த அவரது அடிப்படை ஊதியம் + தர ஊதியம் (5,200 + 2,400) இவற்றுடன் 3 சதவிகித ஊதிய உயர்வு ரூ.230 அதிகரித்து, அவரது சம்பளம் ரூ.7,830-ஆக உயரும். ஆண்டுக்கு இருமுறை உயரும் அகவிலைப்படி, 113-ல் இருந்து 119 சதவிகிதமாக அதிகரித்ததால், ரூ.7,830-க்கு 119% அகவிலைப்படி ரூ.9,318 என்றாகி அவரது மொத்த ஊதியம் ரூ. 7,830 + 9,318 = ரூ.17,148-ஆக கிடைக்கும். 2015, ஜனவரியில் அவர் வேலையில் சேர்ந்தபோது கிடைத்த தொகையைவிட ரூ.960 அதிகம். அதாவது, அவரது மாதாந்திர ஊதியம் ரூ.960-ஆக அதிகரித்துப் போகும்.
இந்த ரூ.960-ல் அவரது ஊதிய உயர்வும், அவரது ஒட்டுமொத்த அடிப்படை ஊதியத்துக்கான 6% அகவிலைப்படி உயர்வும் சேர்ந்துள்ளது. ஊதிய உயர்வின் மூலம் மட்டும் அதிகரித்த தொகை ரூ.230. ரூ.230-க்கு உரிய 119% அகவிலைப்படி ரூ.274. ஆக, 230 + 274 = 504 ரூபாய் ஆகும். இந்த ரூ.504 ஆண்டுதோறும் 10% உயர்ந்துகொண்டே போகும். இது மிகக் குறைந்த சராசரி கணக்கீடு. அப்படிப் பார்ப்போம் எனில்,
ஊதிய உயர்வுத் தொகை:
முதல் வருட தொகை ரூ.504
2-வது ஆண்டு ஊதிய உயர்வுத் தொகை ரூ.560
3-வது ஆண்டில் ரூ.620
4-வது ஆண்டில் ரூ.680
5-வது ஆண்டில் ரூ.750
6-வது ஆண்டில் ரூ.820
7-வது ஆண்டில் ரூ.900 என்ற ரீதியில் உயர்ந்துகொண்டே போகும். அவர் பணியில் நீடிக்கும் காலம் வரை இந்த உயர்வு, தொடரும். இதில் அவரது பதவி உயர்வு, தேர்வு நிலை, சிறப்பு நிலை, ஊதியக்குழு தரும் ஊதிய உயர்வு போன்றவை சேர்க்கப் படவில்லை என்பது முக்கியமான விஷயம்.
இந்த ஊதிய உயர்வு பணத்தை செலவு செய்யாமல் சேமிப்பதன் மூலம் பிற்காலத்தில் பலன் பெற முடியும். இதற்கு ஊழியர்கள் செய்யவேண்டியது தமது ஐந்தே ஐந்து ஊதிய உயர்வுகளை ஐந்தாண்டு அஞ்சலக தொடர்பு வைப்பு (Five year post office recurring deposit) நிதியில் முதலீடு செய்வதுதான். கடன் இல்லாமல் வாழ்வது எப்படி? How To You Live A Debt Free Life.
எப்படி முதலீடுகள் செய்வது:
முதல் வருட ஊதிய உயர்வு தொகை ரூ.504-ல் ரூ.500-யை மாதம் தோறும் ஐந்தாண்டு அஞ்சலக தொடர் வைப்பு நிதியில் செலுத்தி வரவேண்டும். இரண்டாம் ஆண்டு கிடைக்கும் ஊதிய உயர்வுத் தொகை ரூ.560-க்கு மற்றொரு ஐந்தாண்டு தொடர் வைப்புக் கணக்கு துவங்கி, இந்த ரூ.560-யை மாதம் தோறும் செலுத்தி வரவேண்டும்.
அதாவது, முதல் கணக்குக்கான சந்தா தொகை ரூ.500-வுடன், இந்த இரண்டாவது வைப்பு நிதி கணக்குக்கான ரூ.560-யை மாதம் தோறும் சேமித்துவர வேண்டும்.
இதேபோல் மூன்றாவது வருட ஊதிய உயர்வுத் தொகை ரூ.620-க்கு புதிதாக இன்னொரு ஐந்தாண்டு கால தொடர்பு வைப்புக் கணக்கு ஆரம்பித்து, இந்த தொகையையும் மாதந்தோறும் சேர்க்க வேண்டும். அதாவது, ரூ.500 + 560 + 620 என ஒரு மாதத்தில் மொத்தம் ரூ.1,680 சேர்க்க வேண்டும்.
நான்காவது ஆண்டு ஊதிய உயர்வாகக் கிடைக்கும் ரூ.680-யை வேறொரு கணக்குத் தொடங்கி தொடர்ந்து ஐந்தாண்டு களுக்கு சேர்க்க வேண்டும். ஐந்தாவது ஆண்டிலும் சம்பள உயர்வாகக் கிடைக்கும் ரூ.750-யை இன்னுமோர் ஐந்தாண்டு தொடர் வைப்புக் கணக்கு ஆரம்பித்து சேர்க்க வேண்டும்.
ஆறாவது ஆண்டு துவங்கும் போது, நீங்கள் உங்களது முதல் ஊதிய உயர்வுத்தொகை ரூ.500-யை கொண்டு தொடங்கிய முதல் கணக்கு முதிர்வடைந்து, உங்கள் கையில் வட்டியுடன் கூடிய வைப்புத் தொகை ரூ.37,326-ஆக உங்களுக்குக் கிடைக்கும். இனி நான்கு தொடர் வைப்புக் கணக்கு மட்டுமே நிலுவையில் (Running) இருக்கும்.
ஊதிய உயர்வு சேமிப்புத் திட்டம் என்பது பணியில் சேர்ந்து, முதல் ஊதிய உயர்வு பெற்றது முதல் ஓய்வு பெறும் (Retirement) காலம் வரை கிடைக்கும் ஊதிய உயர்வுத் தொகையைக் கொண்டு ஐந்தாண்டு கால தொடர் வைப்புக் கணக்குகளில், ஐந்து கணக்குகளை தொடர்ந்து பராமரித்து வருவதுதான். எனவே, ஆறாம் ஆண்டில் கிடைக்கும் ஊதிய உயர்வுத் தொகை ரூ.820-யைக் கொண்டு புதிய தொடர் வைப்புக் கணக்கை தொடங்க வேண்டியதுதான்.
ஏழாம் ஆண்டில், இதற்கு முன்பு இரண்டாம் ஆண்டில் ரூ.560-யைக் கொண்டு தொடங்கிய இரண்டாவது தொடர் வைப்புக் கணக்கு முதிர்வடைந்து, முதிர்வுத் தொகை ரூ.41,805-ஆக கிடைக்கும்.
இதன்படி, ஒரு வைப்புக் கணக்கு முதிர்வடைந்ததும் அடுத்த வைப்புக் கணக்கை தொடங்குவதும், அந்தக் கணக்கு முடிவடைந்தால் இன்னொரு கணக்கை ஆரம்பிப்பதுமாக ஓய்வு பெறும் நாள் வரை ஐந்து வைப்பு நிதிக் கணக்குகளை பராமரித்து வரும்பட்சத்தில் கிடைக்கக்கூடிய பணப்பலன், அதாவது, முதிர்வுத் தொகை பின்கண்டவாறு பெருகி நம்மை பிரமிக்க வைக்கும்.
‘ஆண்டு தோறும் கிடைக்கும் ஊதிய உயர்வுத் தொகையை சேமிப்புக் கணக்கில் செலுத்தி விட்டு, வேலையில் சேர்ந்தபோது பெற்ற ஊதியத்தையே ஓய்வு பெறுகிற வரை நாங்கள் வாங்க வேண்டுமா? நாங்களும் நாலு காசு செலவழித்து, சந்தோஷமாக இருக்க வேண்டாமா?’ என்று நீங்கள் கேட்கலாம்.
இல்லவே இல்லை. இந்த சேமிப்பை செய்வதன் மூலம் வாழ்க்கையில் நீங்கள் அடைய நினைக்கும் மகிழ்ச்சியை கொஞ்சம்கூட குறைத்துக் கொள்ள வேண்டியதில்லை. வேலையில் இருக்கும் காலத்தில் கிடைக்கும் ஊதிய உயர்வுத் தொகை மட்டுமே இந்தத் திட்டத்துக்கான முதலீடு. அதுவும், பணியின் கடைசி நான்கு ஆண்டுகள் தவிர்த்து.
எடுத்துக்காட்டாக, நீங்கள் பணியில் சேர்ந்த பத்தாவது ஆண்டில் நீங்கள் செலுத்த வேண்டிய சேமிப்புத் தொகை ரூ.1100 + 1000 + 900 + 820 + 750 = ரூ.4,570 மட்டுமே. இது அன்றைய தேதியில் பராமரிக்கப்படும் ஐந்து தொடர்பு வைப்புக் கணக்கு களுக்கான மொத்த தொகை.
அதே சமயம், உங்களது ஊதியம் மிக மிகக் குறைந்த அளவில் பார்த்தாலும், ரூ.32,376-ஆக உயர்ந்திருக்கும். அதாவது, நீங்கள் பணியில் சேர்ந்தபோது பெற்ற ஊதியம், பத்தாவது ஆண்டில் குறைந்தபட்சம் இரட்டிப்பாகி இருக்கும். அப்படி எல்லாம் நடக்குமா என்று கேட்கிறீர்களா? உங்களுக்கு ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக்! 1976-ல் ரூ.300-ஆக இருந்த இளநிலை உதவியாளர் ஊதியம், 2006-ல் ரூ.7,600-ஆக உயர்ந்தி ருக்கிறது. அதாவது, 25 மடங்கு உயர்ந்திருக்கிறது.
1985-ல் 700 ரூபாய்க்கு குறைவாக இருந்த இளநிலை உதவியாளர் ஊதியம், 30 ஆண்டுகளில் ரூ.17,148-ஆக உயர்ந்திருக்கிறது. இது துவக்க நிலை ஊதியம் மட்டுமே. முப்பது ஆண்டுகளில் அந்த இளநிலை உதவியாளர் பல்வேறு பதவி உயர்வு பெறலாம். தேர்வு நிலையானது சிறப்பு நிலையாக உயரலாம்.
ஊதியக் குழு அமைப்பில் ஊதியம் உயரலாம்.அந்த வகையில் ஆரம்பகால ஊதியத்தைப் போல், முப்பது ஆண்டுகளில் 25 மடங்கு ஊதியம் உயர்வதாகத்தான் காட்டுகிறது, இன்று வரையிலான புள்ளி விவரம் (அதாவது, பதவி உயர்வு போன்றவற்றின் பணப் பயன் தவிர்த்து).
தவிர, இந்தத் திட்டத்தில் பங்கு பெறுவோர், ஓய்வு பெறுவதற்கு ஐந்து ஆண்டுகள் முன்பே புதிய தொடர் வைப்புக் கணக்கு துவங்குவதை நிறுத்திக் கொள்ளலாம். பணிக் காலத்தின் (service period) கடைசி நான்கு ஆண்டுகள் முதிர்வுத் தொகையை மட்டும் பெற்றுக்கொள்ளலாம்.
மகள்/மகனின் கல்லூரிக் கல்விக் கட்டணத்துக்கு பணம் தேவை எனில், இந்த சேமிப்பின் மூலம் கிடைக்கும் முதிர்வுத் தொகையை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். சுற்றுலா போன்ற ஆண்டுத் தேவைகளை எதிர்கொள்ளவும் இது ஒரு உன்னதமான சேமிப்பு முறையாக இருக்கும்.
எனினும் இதை ஓய்வுக் கால சேமிப்பு என்கிற நோக்கத்தில் தொடங்கி, வேலையிலிருந்து ஓய்வு பெறுகிற வரை இந்த சேமிப்பிலிருந்து எந்தப் பணத்தையும் எடுக்காமல் தொடர்ந்து வைத்திருந்தால், அரசு ஊழியர்கள் கோடீஸ்வரர்களாக ஆவது உறுதி.