கோல்டு ETF என்றால் என்ன? What Is Gold ETF Details In Tamil.

மஞ்சள் உலோகம் என்று சொல்லப்படும் தங்கத்துக்கு மக்களிடம் எப்போதுமே மவுசு இருக்கத்தான் செய்கிறது. "ஆறிலிருந்து அறுபது வரை' அனைத்து மகளிரும் விரும்புவது தங்க ஆபரணங்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. உறவினர்களின் வீட்டுக்குச் செய்முறை, நேர்த்திக் கடன் போன்ற சமயங்களில் நடுத்தரக் குடும்பங்களைக் கவலைப்படுத்தும் விஷயமும் தங்கத்தின் விலை உயர்வுதான். 

ஆனால், இப்போதைய வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் பணத்தைமுதலீடு செய்ய ஆபரணத் தங்கத்தைவிட வேறு பல நல்ல வழிகள் உள்ளன. குழந்தைகளின் கல்விச் செலவு, திருமணச் செலவு, ஓய்வு கால திட்டமிடல் உள்ளிட்ட அனைத்துக்கும் தங்கம்தான் ஒரு சிறந்த முதலீட்டுச் சாதனமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், தொன்று தொட்டு தங்க நகை சேமிப்புத் திட்டங்களில் இந்தியர்கள் முதலீடு செய்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள், Gold ETF, கோல்டு ஈடிஎஃப் பண்டுகள், தங்க சேமிப்பு ஃபண்டுகள், தங்கச் சுரங்க மியூச்சுவல் ஃபண்டுகள், E-Gold, தங்கம், வைர நிறுவனப் பங்குகள், கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் கோல்டு ஈடிஎஃப்  என்ற தங்க முதலீட்டுத் திட்டம் அனைத்துத் தர மக்களுக்கும் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. முழுக்க, முழக்க முதலீட்டு நோக்கத்தில் தங்கத்தைப் பார்ப்பவர்களின் முதல் விருப்பத் தேர்வாகவும் Gold ETF இருந்து வருகிறது.

எப்போது அறிமுகம்:

தங்கத்தில் முதலீடு செய்யும் கோல்டு ஈடிஎஃப் திட்டம் இந்தியாவில் 2007-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது HDFC Gold ETF, SBI Gold ETF உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் இந்தத் திட்டத்தை நிர்வகித்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் நிர்வகித்து வரும் கோல்டு ஈடிஎஃப் ஃபண்டு மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் மூலம் அறியலாம்.

கூடுதல் வசதி:

மிகச் சிறிய அளவிலும் தங்க ஈடிஎஃப் வாங்க முடியும் என்பதே இதன் கூடுதல் வசதி. அதாவது அரை கிராம் அளவுக்குக் கூட வாங்க முடியும். சிறுகச் சிறுக Gold ETF வாங்கிச் சேகரிப்பவர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பெரும் தங்கத்துக்கு சொந்தக்காரர் ஆகிவிடலாம். கோல்டு ஈடிஎஃப் திட்டம், தங்கத்தை வாங்காமலேயே அதில் முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. தங்க நாணயங்கள், கட்டிகள், நகைகள் போன்றவற்றை வாங்கும் போது அதன் தரத்தை மதிப்பீடு செய்வது சிரமமான ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் அவற்றைப் பாதுகாத்து வைப்பதிலும் நிறைய சிக்கல்கள் உள்ளன. ஆனால், Gold ETF-ல் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட எண்ணிக்கையில் அவர்களுக்கு யூனிட்டுகள் கிடைக்கும். சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப இந்த கோல்டு ஈடிஎஃப் யூனிட்டின் மதிப்பு இருக்கும்.

கோல்டு ஈடிஎஃப் திட்ட அறிமுகத்தின் போது வாங்க நினைப்பவர்கள் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை நிறுவனத்தைப் பொருத்து ரூ.5,000, ரூ.10,000, ரூ.20,000 ஆக உள்ளது. ஆனால், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு சுமார் ரூ.1000 இருந்தாலே முதலீட்டை ஆரம்பிக்க முடியும். தரகுக் கட்டணம் உண்டு. இந்தியாவில் கோல்டு ஈடிஎஃப்கள் அனைத்தும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

பணமாக்குவது எப்படி?

அவசரத் தேவைக்கு பணம் தேவைப்படும்பட்சத்தில் தங்க ஆபரணங்கள், நாணயங்களை விற்பனை செய்வதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. ஆனால், Gold ETF யூனிட்டுகளை எளிதில் விற்பனை செய்ய முடியும். விற்பனை செய்யும் தேதியன்று ஒரு யூனிட் தங்கம் என்ன விலைக்கு பரிமாற்றம் ஆகி வருகிறதோ அதே விலைக்கு விற்பனை செய்ய முடியும். மேலும், எதிர்பார்க்கும் அளவுக்கு விலை ஏறிய பிறகும் யூனிட்டுகளை விற்றுப் பணமாக்கிக் கொள்ளலாம். யூனிட்டுகளை விற்கும் போது அதன் என்ஏவி மதிப்புக்கு ஏற்ப பணமாக முதலீட்டாளர்களினவங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆன்லைன் வர்த்தகக் கணக்கு இருந்தால் இருந்த இடத்தில் இருந்தபடியே யூனிட்டுகளை விற்றுவிடலாம். தங்கத்தை சிறந்த முதலீட்டுப் பொருளாகக் கருதுபவர்களுக்கு கோல்டு ஈடிஎஃப் திட்டம் ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையல்ல.

பட்டியலில் உள்ள கோல்டு ஈடிஎஃப்

தேசியப் பங்குச் சந்தையில் பல்வேறு கோல்டு ஈடிஎஃப் திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

• Axis Gold ETF
• Kotak Gold ETF
• ICICI Prudential Gold ETF
• UTI Gold ETF
• HDFC Gold ETF
• SBI Gold ETF
• IDBI Gold ETF
• Canara Gold ETF
• Birla Sun Life Gold ETF
• Goldman Sachs Gold ETF
• Religare Invesco Gold ETF
• Quantum Gold Fund

உள்ளிட்டவை பட்டியலிடப்பட்டு வர்த்தகம் நடைபெற்று வருகின்றன. இவற்றில் சிலவற்றின் முகமதிப்பு ரூ.10 ஆகவும், சிலவற்றின் முகமதிப்பு ரூ.100 ஆகவுள்ள உள்ளன. தங்கத்தின் விலை சமீப காலமாக தொடர்ந்து குறைந்து வந்துள்ளதால் கோல்டு ஈடிஎஃப்-இன் மதிப்பும் குறைந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை 52 வார குறைந்தபட்ச விலைக்கு அருகில் டிரேட் ஆகி வருகிறது. இந்தத் தருணத்தை முதலீட்டுக்கு நல்ல வாய்ப்பாகக் கருதலாம் என்று முதலீட்டு ஆலோசகர்கள், வல்லுநர்கள் கூறுகின்றனர்.

எப்படி முதலீடு செய்வது?

பரஸ்பர நிதி திட்டங்களில் ஒரு வகைதான் கோல்டு ஈடிஎஃப் (தங்க நிதியம்). இதில் ஒரு யூனிட் என்பது ஒரு கிராம் தங்கத்தைக் குறிக்கும். கோல்டு ஈடிஎஃப்-இல் திரட்டப்படும் நிதியில் சுமார் 90% தங்கமாக வாங்கப்படுகிறது. கோல்டு ஈடிஎஃப் திட்டத்தை புதிதாக அறிமுகப்படுத்தும் போது பரஸ்பர நிதி நிறுவனம் மூலம் முதலீடு செய்ய வேண்டும். வெளியீட்டுக் காலம் முடிந்த பிறகு இந்த யூனிட்கள், பங்குகள் போல பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுவிடும். அதன் பிறகு பங்குச் சந்தைகளின் மூலம்தான் கோல்டு ஈடிஎஃப்-ஐ வாங்கவோ, விற்கவோ முடியும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குக் கவனிக்க வேண்டிய அம்சங்கள் | Mutual Fund Details.

பங்குச் சந்தைகள் இயங்கும் நேரமான காலை 9.15 முதல் மாலை 3.30 மணி வரையிலான காலத்தில் எப்போது வேண்டுமானாலும் பங்குகளை போல கோல்டு ஈடிஎஃப்-ஐயும் வாங்கலாம், விற்கலாம். விலை மாற்றத்தைப் பொருத்து இதன் நிகர சொத்து மதிப்பு ("NAV') மாறும். மற்ற தங்க முதலீட்டு முறைகளுடன் ஒப்பிடும் போது இதில் செலவு குறைவு என்பது கூடுதல் அம்சம்.


பாதுகாப்பான முதலீடு தங்கம்:

சர்வதேச அளவில் பொருளாதார சிக்கல், நெருக்கடி ஏற்பட்ட காலங்களில் எல்லாம் தங்கத்தில் செய்யப்பட்ட முதலீடு பாதுகாப்பானதாகவே இருந்துள்ளது. அந்தக் காலக் கட்டத்தில் நிறுவனப் பங்கு முதலீடு அளவுக்கு பெரிய அளவுக்கு இழப்பைத் தராமல் முதலீட்டாளர்களைப் பாதுகாத்து வந்திருக்கிறது தங்கம். அதன் விவரம்.

தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன:

தங்கத்தின் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உலக அளவில் தங்கம் வெட்டி எடுப்பது குறைந்து கொண்டு வருவது முதல் காரணமாகும். சர்வதேச அளவில் தங்கத்தின் இருப்பும் குறைவாகத்தான் உள்ளது. 2001-ஆம் ஆண்டு முதல் உலக அளவில் தங்கத்தின் உற்பத்தி குறைந்து கொண்டு வந்துள்ளது. தங்க உற்பத்தி தேவைப்பாட்டில் 30 சதவீதம் கூட இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இது தவிர, பணவீக்கம், பங்குச் சந்தை, டாலர் மதிப்பு, சர்வதேச அளவில் ஏற்படும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஆன் லைன் வர்த்தகம், போர் அபாய சூழ்நிலை உள்ளிட்டவையும் தங்கத்தின் விலை உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
முன்பெல்லாம், அணிகலனுக்கு மட்டுமே தங்கத்தை மக்கள் பயன்படுத்தினர். அதற்காக தங்கத்தை வாங்கி வந்தனர். ஆனால், இப்போது தங்கம் என்பது அணிகலனாக மட்டுமல்லாமல், சிறந்த முதலீட்டு வாய்ப்பாகவும் கருதப்படுகிறது. அதன் காரணமாக தங்கத்தை வாங்கிக் குவிக்கிறார்கள்.

பல்வேறு நாடுகளில் வங்கிகள் திவால் ஆகியுள்ளன. இதனால், மக்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தைப் பார்க்கிறார்கள். இதன் காரணமாக வங்கிகளில் முதலீடு செய்வதைக் குறைத்துக் கொண்டு அல்லது தவிர்த்துவிட்டு தங்கத்தை வாங்கிக் குவிக்கிறார்கள். சமீப காலமாக தங்கத்தில் முதலீடு செய்வதும் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.