நீங்கள் எந்த துறையில் புதுத்தொடக்கத் தொழில் செய்ய விரும்புகிறீர்களோ அந்தத் துறையோடு தொடர்புடைய ஒரு தொழிற்சாலையிலோ, அலுவலகத்திலோ 2–3 ஆண்டுகளேனும் பணி செய்து, கண்கள்-காதுகள்-மனம்-புத்தி இவையனைத்தையும் நன்றாகத் திறந்து வைத்துக்கொண்டு மேற்சொன்ன விஷயங்களிலெல்லாம் எத்தனை படிக்கிறீர்களோ அத்தனையும் உங்களுக்கு சுயதொழிலில் இறங்கப் பெரும் உதவியாக இருக்கும்.
முன் அனுபவமில்லாமல், உங்கள் அதீத ஆர்வம், சுயநம்பிக்கை, கற்பனைகள், விவேகமற்ற வேகம் இவற்றின் தாக்கத்தால் களமிறங்கினீர்களென்றால் அது பாய்மரத்தை மட்டும் நம்பி, துடுப்பு எதுவும் இல்லாமல் படகு ஓட்டுவதற்கு சமம்.
நீங்கள் உண்டாக்கி விற்கப்போகும் பொருள் அல்லது சேவைக்கு உள்ள சந்தை அல்லது பயனாளர்கள் எங்கே/ யார்? இது ஒரு மகா கனமான, கடினமான ஒரு கேள்வி! தீவிர நம்பிக்கைக்கும், அவநம்பிக்கைக்கும் இடையே ஏதோ ஒரு நிலையில் யதார்த்தம் நிற்கும்!
இந்த ஒரு கட்டுரையைப் படித்துப்பாருங்கள். எழுதியதும் ஒரு சுயதொழில் நடத்தும் இளவயதுக்காரர் தான். அன்றாடம் அவர்கள், தம் தொழிலில், புதுத்தொடக்க நிறுவனங்களுக்கான சேவையில் பணி செய்வதால், மிக அருகில் இருந்து காணும் யதார்த்தத்தை எழுதியுள்ளார்கள்
ஆதிவாசிகள் தீவில் செருப்பு விற்கக் கள ஆய்வுக்குப்போன இரண்டுபேரின் கதையை நீங்கள்கேட்டிருப்பீர்கள். ஒருவன், “இங்கு யாருமே செருப்பு அணிவதில்லை; மிகப்பெரிய சந்தை இங்கே நமக்குத் காத்துக் கிடக்கிறது" என்றானாம். மற்றொருவன் “இங்கே யாருமே செருப்பணியும் பழக்கமே காலங்காலமாக இல்லை; இங்கே வியாபாரம் செய்ய முனைவது வீணே” என்றானாம்!
அப்படியானால் எது யதார்த்தம்? இரண்டு பேர் கூற்றிற்கும் இடையே எதோ ஒரு புள்ளியில் அது இருக்கிறது. முயற்சி செய்து செருப்பை விற்றுப் பார்க்கலாம். அது எத்தனை லாபகரம், முயற்சிக்கேற்ற பலன் இருந்ததா, போட்ட முதலுக்கு மோசமில்லாமல் தப்பித்ததா அல்லது நட்டமா? விடை எது வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆக, நீங்கள் உற்பத்தி செய்யப்போகும் பொருள், அல்லது தரப்போகும் சேவை வெற்றியைக்காணப்பதில் உங்கள் நம்பிக்கை மட்டும் போதாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.
சொந்த தொழில் செய்பவர்கள் எப்போதும் பல தியாகங்களுக்குத் தயாராகவேண்டும். அலுவலகத்தில் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்களுக்கு பொறுப்பை ஏற்க மேலதிகாரிகளும், சுமையைப் பிரித்துத்தர கீழ் வேலை பார்ப்பவர்களும் உண்டு. சொந்தத் தொழில் முனைவோர் எக்காலத்திலும் பொறுப்பைச் சுமந்தாகவேண்டும். தொழிலில் நன்கு காலூன்றும் வரை நீங்களே நிர்வாகி, நீங்களே எழுத்தர், நீங்களே பணம் கையாள்பவர் (Cashier), நீங்களே எடுபிடி! எல்லாவற்றிற்கும் மனதைத் தயார் படுத்திக்கொள்ளவேண்டும்.
ஆரம்ப நிலையில் குளிரூட்டப்பட்ட அலுவலகம்,கார், பெரிய மேஜை, ஆடம்பரமான நாற்காலி, ஐந்து நட்சத்திர ஓட்டலில் வாடிக்கையாளருடன் மதிய விருந்து, வெளியூர் போனால் மூன்று நட்சத்திர ஓட்டலில் தங்கல், எப்போதும் விமானப்பயணம் என்பதெல்லாம் கனவு கூடக் காணமுடியாது! அப்படியே அகலக்கால் வைத்தீர்களானால், அவசரமாய் கடையைக் கட்டிக்கொண்டு போகவேண்டிவரும்!
எத்தனை விரைவில் முடியுமோ அத்தனை விரைவில் லாபம் ஈட்டத்தொடங்கவேண்டும். சிறிதாக ஆரம்பித்துப் படிப்படியாக, கவனமாக முன்னேறி அதன் கூடவே லாபமும் படிப்படியாகக் கூடிவரும் நிறுவனமே உண்மையான நிறுவனம்.
இதனைப் பழைய பஞ்சாங்கம் என்று உதறித் தள்ளாதீர்கள். Flipkart போன்ற புதுத்தொடக்க நிறுவனங்கள் லாபம் ஏதும் சம்பாதிக்காமலேயே அபாரமான பெரும் வளர்ச்சி அடைந்த கதையெல்லாம் நமக்கு வேண்டாம். அது நமது ஊர்/ பாரம்பரிய தொழில்முறையோ சரியான முன்னுதாரணமோ அல்லவே அல்ல.
தோல்விதான் வெற்றிக்குப்படி என்பது ஓரளவுக்குத்தான். தோற்றுக்கொண்டேஇருந்தும் விடாது மேலும் மேலும் கடன் வாங்கி தோல்வியை ஓப்பாது வென்று காட்டியேதீருவேன் என்று ஒருநாளும் குதிக்காதீர்கள். கவனம், நிதானம், விவேகம், பாதை மாற்றல் இவையெல்லாம் தொழிலில் அவசியம்.
அளவுக்கு மீறிக் கடன் வாங்கி ஆடம்பரமாய் தொழில் செய்ய நினைக்காதீர்கள். இப்போது புதுத்தொடக்க நிறுவனங்களுக்குப் பலரும் முதல் போட நான் நீ என்று முன்வருவது உண்மையே. சில சமயம், உங்கள் தேவைக்கும் நிலைமைக்கும் மீறிக்கூட முதல் வந்து சேரலாம் (உங்கள்தொழில் விளக்கப் பேச்சு முதலீட்டாளரை மிகவும் கவர்ந்து விட்டால்). அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. பழமொழியை மறக்காதீர்கள்.
உங்களுக்கு ஓர் உண்மை தெரியுமா? தங்கள் சொந்தக்காசைப் போட்டு தங்கள் திறமையையும் உழைப்பையும் நம்பி, சிறிதாய்த் தொடங்கிப் படிப்படியாய் வளர்ந்துள்ள தொழில்கள் (bootstrap கம்பெனிகள்) தான் தற்காலத்தில் முதலீட்டாளர்கள் பணம் போட்ட புதுத்தொடக்க நிறுவனங்களைக் காட்டிலும் சீக்கிரம் லாபம் பார்த்து, தொழிலிலும் பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன.
மற்றொரு உண்மை தெரியுமா? இந்தியாவில், புதுப் புது idea -க்களை முன்வைத்து உற்சாகத்துடன் தொடங்கப்பட்ட புதுத்தொடக்க நிறுவனங்களில் 90 சதவீதம் முதலாண்டிலேயே “ஊற்றி மூடிக்கொண்டு" போவது தான் எதார்த்த நிலை!
திட்டமிடல்:
• நிதி சார்ந்த திட்டமிடல்
• இடம் சார்ந்த திட்டமிடல்
• மனித வள சார்ந்த திட்டமிடல்
நிதி சார்ந்த திட்டமிடல்:
நீங்கள் தொழில் தொடங்க உள்ளீர்கள் என்றால் முதலில் நிதி தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கு வங்கியில் கடன் வாங்கலாம் அல்லது உங்களின் பெற்றோரிடம் / உறவினரிடம் கடன் வாங்கலாம். இல்லையேல் உங்களது நண்பர்களோ அல்லது நம்பிக்கையானவர்களையோ பங்கு தாரர் ஆகா சேர்த்து கொள்ளலாம்.
இந்திய அரசாங்கம் இதை போல தொழில் முனைவோர்களுக்கு முத்ரா திட்டம் மூலம் கடனுதி செய்கிறது, இதனை உபயோகப்படுத்தி கொள்ளலாம். ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் பதிவு செய்து அரசாங்க சலுகைகளை (வரி சலுகை உட்பட) பெற்று கொள்ளலாம்.
இடம் சார்ந்த திட்டமிடல்:
தொழில் நிறுவனம் என்பதால் உங்களின் வாடிக்கையாளர்கள் நிச்சயம் பெரு நகரங்களில் தான் இருப்பார்கள். ஆதலால் நீங்கள் அங்கு தான் உங்களின் இடத்தினை தேர்வு செய்ய வேண்டும். ஆரம்ப கட்டத்தில் ஒரு நல்ல இடத்தினை வாங்குவதை விட வாடகைக்கு எடுப்பதே சிறந்தது. இதன் மூலம் பணத்தினை மிச்ச படுத்தலாம். இடம் நல்ல பார்க்கிங் வசதிகளோடு நெடுஞ்சாலைகளை ஒட்டி இருந்தால் நல்லது.
மனித வள சார்ந்த திட்டமிடல்:
வரவேற்பறையில் பணி புரிய ஒரு ஆண் அல்லது பெண்ணை வேளைக்கு எடுக்க வேண்டும். இவர்களுக்கு 1–2 ஆண்டு பணி அனுபவம் இருந்தால் போதும். அதிக பணி அனுபவம் உள்ளவர்களை எடுக்கும் பொது அவர்களுக்கு சம்பளம் அதிகமாக கொடுக்க வேண்டி வரும்.
ஆரம்ப கட்டத்தில் உங்களக்கு தொழில் மற்றும் பயிற்சி கொடுப்பதில் அனுபவம் இருந்தால் நீங்களாக பயிற்றுநராக பணி புரியலாம். பிறகு வேணுமானால் பிரீலான்சர் இல் ஒன்று அல்லது இரண்டு பயிற்றுநர்களை வாடகை முறையில் எடுத்து உபயோகப்படுத்தி கொள்ளலாம்.
ஒன்று அல்லது இரண்டு முழு நேர மனித வள அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இவர்கள் தான் நமது நிறுவனத்திற்கு வடிக்கையாளர்களை சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள். இவர்கள் நல்ல பணி அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மற்ற அனைத்து வேலைகளுக்கு ஒரு நல்ல ஆபீஸ் பாய் சேர்த்து கொள்ளுதல் நலம்.
பணிக்குழு:
நீங்கள் ஒரு தொழில் செய்கிறீர்கள் என்றால் உங்கள் தொழிலுக்கு சந்தைப்படுத்தல், பிராண்டிங், இணையதளம், உள்ளடக்க உருவாக்கம், கணக்கியல், சட்ட சிக்கல்கள், இடம் சார்ந்த பிரச்சனைகள், காப்பீடு, உதவியாளர்கள் தேவைப்படும், உங்கள் பணிக்குழுவில் கலந்து ஆலோசித்து தேவைப்படும் போது இவர்களை வாடகை முறையில் எடுத்து உபயோக படுத்திக்கொள்ளலாம்.
உங்களின் முதலாளி:
நீங்கள் தான் உங்கள் நிறுவனத்தின் முதலாளி. ஆனால் உங்களுக்கும் ஒரு முதலாளி இருக்கார் என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். தங்கள் யூகிக்க முடிகிறதா யார் உங்களின் முதலாளி என்று, ஆமாம் - உங்களின் வாடிக்கையாளர்கள் தான் உங்களின் முதலாளி. அவர்களின் மனதிருப்தியே உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.
சந்தை போக்கு:
சந்தை போக்கு மிகவும் முக்கியம் தற்போதைய சந்தையில் எந்த தொழில்நுட்பம் மிகவும் பிரபலமாக உள்ளதோ, அந்த தொழில்நுட்பத்தை நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரலாம்.
உங்கள் தொழில் வெற்றியடைய நீங்கள் தனித்துவமான கொள்கையை பின்பற்ற வேண்டும். மற்ற தொழில் போட்டியாளர்கள் உபயோகப்படுத்தும் கொள்கைகளை நீங்கள் அப்படியே பின்பற்றதீர்கள், அதில் சில பட்டி டிங்கரிங் பார்த்து உபயோகப்படுத்தலாம்.