கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டதின் திருப்புவனம் வட்டத்தில் உள்ள கிராமம் ஆகும். இது வைகை நதிக்கரையில் இருந்து 11கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆகழ்வாய்வில் அங்கு, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கீழடி நாகரீகத்தின் காலம் என்ன:
கீழடியில் கிடைத்த 6 பொருட்கள் ஆக்சலரேட்டட் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி (Accelerated mass spectometry) ஆய்வுக்காக அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகல் லேப்பிற்கு அனுப்பப்பட்டன. அதில் கிடைத்த முடிவுகளின்படி, அந்தப் பொருட்கள், கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரு மட்டங்களுக்கு கீழேயும் மேலேயும் பொருட்கள் இருப்பதால், கீழடியின் காலகட்டம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு வரையிலானது என தொல்லியல் துறை முடிவுக்கு வந்துள்ளது.
அகழ்வாராய்ச்சி:
2013 ஆம் ஆண்டு முதலில் கீழடியில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டு ஐந்து நிலைகளாக நடைப்பெற்று வருகிறது. இதில் முதலில் 2014 - 2017 வரை இந்திய தொல்லியல் துறையும் அதன் பின் தமிழ்நாடு தொல்லியல் துறையும் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
கண்டெடுக்கப்பட்டவைகள்:
இதுவரை இங்கு 5,820 பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. மேலும் இந்த இடத்தில் சுட்ட செங்கல்லால் ஆன சுவர்கள், உறைக்கிணறுகள், பானை செய்யும் தொழில் கூடங்கள், வெறும் கையால் அமுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட வடி நீர் கால்வாய்கள், கூரை ஓடுகள் போன்ற பல அமைப்புகள் கானப்பட்டன.
மேலும் தங்கத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள், யானை தந்ததில் செய்யப்பட்ட ஆபரணங்கள், விளையாட்டுப் பொருட்கள், சுடுமண் விளையாட்டுப் பொருட்கள், இரும்பு கருவிகள், தந்தத்தால் செய்யப்பட்ட சீப்புக்கள், இரத்தின கற்களால் ஆன ஆபரணங்கள், கற்களால் செய்யப்பட்ட ஆபரணங்கள், சுடு மண் மணிகள், வட்ட சில்லுக்கள், காதணிகள், தக்களிகள், மனித மற்றும் விலங்குகளின் வடிவில் பொம்மைகள், கருப்பு மற்றும் சிவப்பு நிற உடைந்த பானை ஓடுகள் மற்றும் ரோமானியா சின்னம் பொறிக்கப்பட்ட பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இங்கு கண்டெடுக்கப்பட்ட பானைகளை சுடுவதற்க்கு முன்னரும் சுடப்பட்ட பின்னரும் கீறல்கள் வடிவில் பல குறியீடுகளை இட்டு பானைகளை வனைந்துள்ளனர். தமிழ் பிராமி எழுத்துக்களால் செதுக்கப்பட்ட பல பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நாகரிகம்:
கீழடி வைகை நதிக்கரைக்கு மிக அருகில் இருப்பதால் நகர நாகரிகத்தில் சிறந்த விளங்கியதர்கான தெளிவு கிடைத்துள்ளது. செங்கல் கட்டுமானத்தில் வீடுகள், வடிகால் அமைப்புகள், தொழில் கூடங்கள் மற்றும் வணிகம் ஆகியவற்றை பார்க்கும் போது இரண்டாம் நகர நாகரிகம் கங்கை சமவெளி பகுதிகளில் தோன்றும்போது அல்லது அதற்க்கு முன்னதாகவே இங்கு இரண்டாம் நகர நாகரிகம் தோன்றி இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது (கிமு 6 ஆம் நூற்றாண்டு).
விவசாயம்:
இங்கிருந்த மக்கள் விவசாயம் மிகச் சிறப்பாக செய்துள்ளனர் என்பதற்க்கு ஆதாரமாக இங்கு பசு, காளை, ஆடு மற்றும் எருமை போன்றவற்றின் எலும்புகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கட்டிடங்கள்:
மிகவும் தரமான கட்டுமானப் பொருட்களை கொண்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு சன்னமான களிமண், சுட்ட செங்கல், சுண்ணாம்பு சாந்து பயன்படுத்தி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் அதிகளவில் இரும்பு ஆணிகளை இதற்காக பயன்படுதியுள்ளனர்.
இங்கு கிடைக்கப்பட்ட ஓடுகளில் மற்றும் செங்கற்களில் 80% சிலிக்காவும் 7% சுண்ணாம்பு கலவையும் கானப்படுகிறது. மேலும் சுண்ணாம்பு சாந்தில் 97% சுண்ணாம்பு காணப்படுகிறது.
பானைகள்:
பானைகள் பெரும்பாலும் சிவப்பு கருப்பு நிறத்தில் கிடைத்துள்ளது. இதில் பிராமி தமிழில் ஆத(ன்), குவிரன் போன்று பொறிக்கப்பட்டுள்ளது.
ஆத(ன்), குவிரன் - ஆட்பெயர்கள்
இதன் மூலம் சங்க காலச் சமூகம் (கிமு 6ஆம் நூற்றாண்டு) எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது புலப்படுகிறது.
தொழில்:
இங்கிருந்த மக்கள் விவசாயத்துடன் பானை வானைதளை தொழிலாக கொண்டிருந்திருக்கின்றனர். இங்கு ஒரு இடத்தில் அதிகளவில் பானை ஓடுகள் குவியலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகம் சிவப்பு கருப்பு நிறம் கொண்ட பனைகளை செய்து பயன்படுத்தியுள்ளனர். இதனால் ஹேமடைட் (சிவப்பு பானை) பயன்பாடு அந்த காலத்தில் இருந்துள்ளதை மேலும் தெளிவாக்குகிறது.
நெசவு தொழில் செழித்து இருந்துள்ளதற்கு அடையாளமாக நெசவு செய்யப் பயன்படும் மற்றும் நூல் நூற்க்க பயன்படும் தக்களிகள், கூர்முனை கொண்ட எலும்பு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வாழ்வியல்:
இங்கிருந்த மக்கள் வாழ்வியலில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்கு பல தடயங்கள் கிடைத்துள்ளது. இங்கு இருந்த மக்கள் அதிகளவில் தங்கத்தால் செய்யப்பட்ட காதணிகள் மற்றும் சில இரத்தின ஆபரணங்களை பயன்படுத்தியுள்ளனர். மேலும் அரவைக் கல், மண் குடுவை மற்றும் தந்தத்தால் செய்யப்பட்ட சீப்பு போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொழுதுப்போக்கு:
தனித்திறனை வளர்க்கும் வகையில் பல விளையாட்டுக்களை பொழுதுபோக்காக வைத்துள்ளதை அங்கு கண்டெடுக்கப்பட்ட பகடை காய்கள், சதுரங்க காய்கள், பெண்கள் விளையாடும் வட்ட சில்லுக்கள், சிறுவர்கள் விளையாடும் சுடு மண்ணால் ஆன சக்கரங்கள் மற்றும் வட்ட சுற்றிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு பல சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய வடிவிலான மனித, விலங்கு பொம்மைகள் மற்றும் அந்த பொம்மைகளை செய்வதற்கான அச்சு போன்றவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வணிகம்:
வடமேற்க்கு இந்தியாவை சார்ந்த சூதுபவள மணிகள், அகேட் மணிகள் மற்றும் ரோம் நகர சாயல் கொண்ட பானை ஓடுகள் அதிகம் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இதன் மூலம் பல பகுதிகளுக்கு சென்று வணிகம் செய்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளன.
ஆராய்ச்சி மற்றும் முடிவு:
உலக புகழ் பெற்ற ஆராய்ச்சி கூடங்களில் இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை அனுப்பி ஆய்வு செய்யப்பட்டது. இதில் அமெரிக்காவில் புளூரிடா மாகாணத்தில் உள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்தில் கரிம பகுப்பாய்வும், இத்தாலியில் உள்ள பைசா பல்கலைக் கழகத்தில் கிடைத்த பானை ஓடுகளையும், மற்றும் பூனேவில் உள்ள டெக்கான் கல்லூரியில் கிடைத்த எலும்புகளையும் கொண்டு மிகப்பெரிய அளவில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
இதில் கிடைத்த ஆராய்ச்சிகளின் முடிவில் கரிம பகுப்பாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதில் பொருட்கள் கிமு.580ஆம் ஆண்டை சார்ந்ததாகவும், கிடைத்த பிராமி வடிவ எழுத்துகள் கிமு..6ஆம் நூற்றாண்டையும் சார்ந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
முடிவு:
இந்த ஆய்வின் மூலம் சங்க கால தமிழ் சங்கம் மேலும் 200 முதல் 400 ஆண்டுகள் வரை பழமையானது ஆகும். மேலும் கங்கை சமவெளி பகுதிகளில் தான் இரண்டாம் நவீன நாகரிகம் முதலில் தோன்றியது என்ற கருத்தை மாற்றியமைக்கும் ஆய்வாக இது உள்ளது. தற்போது ஆய்விற்காக முழு பகுதியையும் தோண்ட திட்டமிட்டுள்ளனர், எனவே இன்னும் நமக்கு பல தகவல்கள் நம் மொழியையும், பண்பாடையும் அறிய உதவும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.