கிரெடிட் கார்டை பயன்படுத்துவது எப்படி? How To Use Credit Card Deails In Tamil.

Credit Card – இன்று அனைவருக்கும் மிகச் சுலபமாக கிடைக்கக்கூடிய விஷயமாக மாறிவிட்டது. வங்கிகளே போன் செய்து ‘உங்களுக்கு கிரெடிட் கார்டு’ வேண்டுமா? எனக் கேட்டு வீட்டுக்கே  கொண்டு வந்து தந்துவிடும் அளவுக்கு எளிமையான விஷயமாக மாறிவிட்டது. மேலும், கிரெடிட் கார்டு வைத்திருப்பது கௌரவமாக மாறிவிட்டது. ஆனால், இதனை வாங்கிவிட்டு சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் பலரும் மாட்டிக்கொண்டு விழிக்கிறார்கள்.

நவீன பொருளாதாரம் வழங்கும் எந்த வசதிகளையும் உடனடியாக புறக்கணிக்கவோ, அதைக் கொண்டாடவோ தேவையில்லை. கவனத்தோடு பயன்படுத்தலாம். தேவையில்லை என்றால் விட்டு விடலாம். அப்படித்தான் Credit Card பயன்படுத்துவதைப் பார்க்க வேண்டும். ஆனால் நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்கிறோம் என்கிற எண்ணம் இருக்க வேண்டும். Credit Card  மூலம் அதிக கடன் வாங்கிவிட்டு கட்ட முடியவில்லை என்றால் அதற்கு வட்டி, அபராதம், தாமதக் கட்டணம் என இன்னபிற வகைகளில் கூடுதல் பணத்தையும் இழக்க வேண்டும்.

                       

கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய  தவறுகள்: 

அளவுக்கு மீறி செலவழிக்காதீர்கள்: 

நமது சேமிப்பில் இல்லாத அளவு தொகையைத் தாண்டி செலவு செய்யதான் கிரெடிட் கார்டு. இப்படி ஒரு வசதி கிடைப்பதினாலேயே அதிக தொகையை செலவழிக்கலாம் என்று நினைக்காதீர்கள். உங்கள் தேவைக்கேற்ப, உங்களால் திரும்பக் கட்ட முடிகிற அளவுக்கான பணத்தை  மட்டுமே கிரெடிட் கார்டு மூலம் எடுத்துப் பயன்படுத்துங்கள். உதாரணமாக, உங்களுக்கு ரூ.50,000 கிரெடிட் லிமிட் இருந்தால், இவ்வளவு பணத்தை யும் எடுத்துச் செலவு செய்ய வேண்டும் என்பதில்லை.  உங்கள் தேவை ரூ.10,000 என்றால் அதற்கு மட்டும் செலவு செய்யுங்கள்.

கிரெடிட் கார்டுடின் பில் கட்டுவதை தள்ளிப் போடாதீர்கள்:

கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்ததற்கான பில்லை அதன் கெடு தேதிக்குள் செலுத்த வேண்டும். இல்லை எனில், மாதம் 3% வரை வட்டி செலுத்த வேண்டியிருக்கும். ஓர் ஆண்டு முழுவதும் என எடுத்துக்கொண்டால் சுமார்  36 – 40% நீங்கள் வட்டி செலுத்த நேரிடும். இதனால் உங்களது CIBIL SCORE பாதிக்கப்பட்டு, உங்களால் வங்கிகளில் கடன் பெற முடியாத நிலை ஏற்படக் கூடும்.

தவணைத் தேதி மற்றும் வட்டியில்லாக் காலம்:

உங்களுடைய தவணைத் தேதி மற்றும்  வட்டியில்லாக் காலம் எப்போது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக, ஒரு கிரெடிட் கார்டுக்கு வட்டியில்லாக் காலம் என்பது 50 நாட்கள் என கொண்டால், ஒருவர் 1-ம் தேதி வாங்கும் பொருளுக்கு அடுத்த மாதம் 24-ம் தேதி வரை வட்டியில்லாக் காலம் இருக்கும். ஆனால், அவரே  ஒரு பொருளை 15-ம் தேதி வாங்குகிறார் என்றால் அவருக்கு 40 நாட்கள்தான் வட்டியில்லாக் காலம் கிடைக்கும்.

Credit Card -களுக்கான வட்டியில்லாக் காலம் என்பது பணம் செலுத்தும் நாள், நீங்கள் பொருள் வாங்கிய தேதி ஆகியவற்றைப் பொறுத்து மாறும்.  இதனைச் சரியாக புரிந்து கொள்ளாமல் போனால்,  தேவை இல்லாமல் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்காதீர்கள்:

வங்கிகள் உங்களது பரிவர்த்தணை அளவைக் கூட்ட உங்களுக்கு கூடுதல் வசதிகளை அளிக்கும். கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்கும் வசதி தரப்பட்டிருக்கும். இந்த வசதியை தேவையில்லாமல் பயன்படுத்தாதீர்கள். இதனால்  உங்கள் வட்டியில்லாக் காலமும் பாதிப்படையும். சில நேரங்களில் உங்களுக்கு இது தேவையற்ற‌ சுமையாக மாறும். Credit Card -டில் பணம் எடுத்த அடுத்த நொடியில் இருந்தே வட்டி கணக்கிடப்படுவது துவங்கிவிடும் என்பதை மறக்கக் கூடாது.

பல கிரெடிட் கார்டுகள் வேண்டாம்: 

உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரே Credit Card மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வாங்கித் தேவையற்ற சிக்கலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். இதற்கான தவணைத் தேதி, பில் கட்டணம் என பல விஷயங்களில் சிக்கித் தேவையில்லாத கடன் சுமையில் மாட்டிக்கொள்ளும் நிலை உருவாகும்.

 நண்பர்கள், உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்: 

உங்களிடம் கிரெடிட் கார்டு உள்ளது என்றால் உங்கள் கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கும்  உங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். ஒருவேளை அவர்கள் உங்களது Credit Limit முழுவதுக்கும் பொருளை வாங்கி விட்டால் நீங்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும். தவிர, அவர்கள் பணத்தைத் திரும்பச் செலுத்த தாமதப்படுத்தினால் அது உங்களுக்கு கூடுதல் சுமையாக மாறும். 

Impulse Purchases தவிருங்கள்: 

ஷாப்பிங் மால் போகும்போது அல்லது ஏதாவது பெரிய பர்ச்சேஸ் செய்யும்போது ‘நம்மிடம் Credit Card உள்ளதே’ என்று பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாம்.  இல்லையெனில் 1,000 ரூபாய்க்கு செய்ய வேண்டிய செலவுகளை உங்களது இம்பல்ஸ் காரணமாக 1,500 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும். அதனால் உங்கள் பர்சேஸை இம்பல்ஸாக அதிகரிக்காதீர்கள்.

ஆஃபர்களுக்கு தலை சாய்க்காதீர்கள்: 

பே-பேக் ஆஃபர், ரூ. 10,000-க்கு மேல் பர்ச்சேஸ் செய்தால் Offer என பல ஆஃபர்களை  ஆன்லைன் நிறுவனங்கள் அளிக்கும். அதனையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு உங்களது Purchase அள‌வைக் கூட்டாதீர்கள்.
உதாரணமாக, நீங்கள் வாங்க வேண்டிய பொருள் 8,000 ரூபாய்க்குத்தான் என்றால் 10,000 ரூபாய் ஆஃபருக்காக ஆசைப்பட்டு மேலும் 2,000  ரூபாயைச் செலவழிக்காதீர்கள். கூடுதலாக நீங்கள் செலவு செய்வதால், நீங்கள் கூடுதலாக  வட்டி கட்ட வேண்டியிருக்கும்.  அதனால் ஆஃபர்களில் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி உங்கள் பணத்தை வீணாக்காதீர்கள்.

தினசரி செலவுகளுக்கு பயன்படுத்தாதீர்கள்:

கிரெடிட் கார்டுகளை சரியான செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். தினசரி செலவுகளுக்குப் பயன்படுத்த துவங்காதீர்கள். அது அதிகப் படியான செலவுகளையும், சிறு சிறு செலவுகளாக சேர்ந்து, மிகப் பெரிய தொகையை உங்கள் கணக்கிலும் எடுத்துக் கொண்டு விடும்.

விதிமுறை, நிபந்தனைகளை கட்டாயம் படியுங்கள்: 

கிரெடிட் கார்டுக்கான விதிமுறைகள், நிபந்தனைகளை  கட்டாயம் படியுங்கள். உங்கள் கார்டுக்கு உள்ள சலுகைகள் பற்றி தெரியாமல் அதில் எக்கச்சக்கமாக பொருட்களை வாங்கிக் குவித்து விட்டால், பின்னர் தவணைத் தொகை செலுத்தும்போது விழி பிதுங்கி நிற்பீர்கள். உங்கள் கிரெடிட் கார்டு பில் உங்களை பயமுறுத்துகிற மாதிரி இல்லாமல் இருந்தாலே போதும்.

Credit Card-யை ஒப்படைப்பது:

கிரெடிட் கார்டை இனி பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்து விட்டால் முறையாக ஒப்படைத்து No Due சான்றிதழ் வாங்க வேண்டும். கார்டை ஒப்படைக்காமல், நான் பயன்படுத்தவே இல்லையே என்று சொல்ல முடியாது. பராமரிப்பு கட்டணம், ஆண்டுக்கட்டணம் கணக்கிடுவார்கள். அதைக் கட்டவில்லை என்றால் அதற்கும் வட்டி கணக்கிடப்படும்.